
பாட்னா: நவம்பர் 14-
பீகார் மாநிலத்தில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடந்து வருகிறது. இதில் காலையிலேயே அதிர்ச்சி தரும் விதமாக மாஜி முதல்வர் லாலு பிரசாந்த் யாதவின் மூத்த மகனும் ஜனசக்தி ஜனதா தள தலைவருமான தேஜ்பிரதாப் யாதவ் பின்னடைவைச் சந்தித்துள்ளார். பீகார் மாநிலத்தில் மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாகக் கடந்த வாரம் தேர்தல் நடந்தது. வாக்குப்பதிவு முடிந்த நிலையில், கிட்டத்தட்ட எல்லா எக்ஸிட் போல்களிலும் பாஜக வெல்லவே வாய்ப்புகள் அதிகம் எனச் சொல்லப்பட்டது. இந்தச் சூழலில் தான் அங்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது. இதில் முதல்கட்ட டிரெண்டிங்கில் கடும் போட்டி இருப்பது தெரிகிறது. அதேநேரம் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கே முன்னிலை இருப்பதும் தெரிகிறது. பல தொகுதிகளில் என்டிஏ கூட்டணி வேட்பாளர்களே முன்னிலையில் இருக்கிறார்கள். இதற்கிடையே வாக்கு எண்ணிக்கை தொடங்கிய உடனேயே லாலு குடும்பத்திற்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. அங்கு மகுவா தொகுதியில் போட்டியிட்ட லாலுவின் மூத்த மகனான தேஜ்பிரதாப் யாதவ் பின்னடைவைச் சந்தித்துள்ளார். ஆரம்பக்கட்ட வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, அவர் தனது 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. தேஜ்பிரதாப் யாதவ், பீகார் அரசியலில் ஒரு முக்கிய நபராக அறியப்படுகிறார். இந்தத் தொகுதியின் முடிவுகள் அவரது அரசியல் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இருப்பினும், தற்போது வரை வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அவருக்குச் சாதகமாக இல்லை.
இதில் நாம் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். அதாவது தேஜ்பிரதாப் யாதவிற்கும் தேஜஸ்விக்கும் இடையே நீண்ட காலமாக அதிகாரப் போட்டி நிலவியது. கருத்து வேறுபாடுகளும் அதிகரித்துக் கொண்டே சென்றது. இதனால் தேஜ்பிரதாப் யாதவ் கட்சியில் இருந்து கூட நீக்கப்பட்டார். லாலு பிரசாந்த் வெளிப்படையாகவே இதை அறிவித்தார். இதையடுத்து தேஜ்பிரதாப் யாதவ் புதிதாக ஜனசக்தி ஜனதா தளம் என்ற கட்சியைக் கடந்த செப்டம்பர் மாதம் ஆரம்பித்தார். இந்த முறை அவர் பீகாரில் 22 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.















