
புதுடெல்லி: நவ. 14-
பிஹார் தேர்தல் முடிவுகளில் பாஜக அங்கம் வகிக்கும் என்டிஏ கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில், இதை மேற்கோள் காட்டி தனது கருத்தை பகிர்ந்துள்ளார் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்.
“பிஹார் மாநிலத்தை பற்றி அறிந்தவர்களுக்கு நிச்சயம் இது தெரியும். பிஹார் மக்கள் அராஜகம் மற்றும் காட்டாட்சியை அறவே விரும்பவில்லை. அதனால் பிஹார் மக்கள் அவர்களை புறக்கணித்துள்ளனர். இப்போதைய இளைஞர்கள் காட்டாட்சி முறையை கண்டதில்லை. ஆனால் அவர்கள் வீட்டு பெரியவர்கள் அந்த ஆட்சியை கண்டுள்ளனர். ஊழல் தலைவர்களிடம் பிஹாரை ஒப்படைக்க அவர்கள் தயாராக இல்லை.பாஜகவின் தொண்டராக நான் ஒரு விஷயத்தை தெரிவிக்க விரும்புகிறேன். பிஹார் வெற்றி இப்போது நம் வசம் உள்ளது. அடுத்து மேற்கு வங்கம்தான். நிச்சயம் அடுத்த ஆண்டு நடைபெறும் மேற்கு வங்க மாநில தேர்தலில் நாங்கள் வெல்வோம். அங்கு தற்போதைய ஆட்சியாளர்கள் அராஜக போக்கை பின்பற்றி வருகின்றனர். அதனால் மேற்கு வங்க மக்களின் ஆதரவும் எங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். வளர்ச்சி, சமூக நல்லிணக்கத்தை பேணிய ஆட்சிக்கு கிடைத்த அங்கீகாரம்தான் பிஹாரில் இப்போது என்டிஏ வெற்றிக்கு அடித்தளம் அமைத்துள்ளது. மாவட்டங்கள் தோறும் பொறியியல், மருத்துவ கல்வி உட்பட கல்வி நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளன. இது முன்னேற்றத்தின் வெளிப்பாடு” என ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றுக்கு மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பேட்டி கொடுத்துள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. பெரும்பான்மைக்கு 122 இடங்கள் வெற்றி தேவை எனும் நிலையில், காலை 10 மணி நிலவரப்படி, பாஜக – ஐக்கிய ஜனதா தளம் அடங்கிய என்டிஏ 160 இடங்களிலும், ராஷ்டிரிய ஜனதா தளம் – காங்கிரஸ் அடங்கிய மகா கூட்டணி 79 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.















