பாபர் அசாம் அபார சதம்.. 807 நாட்களுக்கு பிறகு நடந்த அற்புதம்.

ராவல்பிண்டி, நவ. 15- இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் சதம் அடித்து அசத்தியுள்ளார். இதன்மூலம் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு அவர் சர்வதேச கிரிக்கெட்டில் சதம் அடித்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார். இதன் காரணமாக பாகிஸ்தான் அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்று தொடரையும் கைப்பற்றியது. பாகிஸ்தானில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலால் இந்த போட்டி நடைபெறுமா, நடைபெறாதா என்ற குழப்பம் இருந்தது. இதன்பின் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மேற்கொண்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக இந்த போட்டிகள் நடந்தது. ராவல்பின்டியில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இலங்கை அணியில் சதிராசமர விக்ரமா 42 ரன்களையும், ஜனித் லியாங்கே 54 ரன்களும், கமிண்டு மெண்டீஸ் 44 ரன்களும் எடுத்தனர். இதன் காரணமாக இலங்கை அணி 50 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் இறங்கியது. தொடக்க வீரராக விளையாடிய சையும் அயூப் 25 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மறுமுனையில் பக்கர் சமான் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 8 பவுண்டரி ஒரு சிக்சர் என 78 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இந்த நிலையில் பாபர் அசாம், தன்னுடைய வழக்கமான அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இலங்கை வீரர்களின் பந்துவீச்சை லாவகமாக எதிர்கொண்டு தனது பழைய ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தினார். இதன் மூலம் 115 பந்துகளில் பாபர் அசாம் தன்னுடைய சதத்தை பூர்த்தி செய்தார். இது சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் அவர் விளாசிய 20வது சதமாகும். இதன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த பாகிஸ்தான் வீரர்கள் பட்டியலில் பாபர் அசாம் முதலிடத்தை பிடித்திருக்கிறார். இதற்கு முன்பு சையது அன்வர் 20 சதத்தை எடுத்து இருந்தார். தற்போது பாபர் அவரை சமம் செய்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 83 இன்னிங்ஸ்களுக்குப் பிறகு பாபர் அசாம் சதம் அடித்திருக்கிறார்.
விராட் கோலி 2019 ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டு வரை 83 இன்னிங்ஸ்களாக சதம் அடிக்காமல் இருந்தார். தற்போது விராட் கோலி செய்த அதே சாதனையை பாபர் அசாமும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடரை பாகிஸ்தான் அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வென்று தொடரை கைப்பற்றி இருக்கிறது.