புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த மண்ணுக்கே அழைக்குமா பீகார்..?

புதுடில்லி, நவ. 15- பீகார் மாநிலம் பொருளாதார ரீதியாக நல்ல வளர்ச்சியை அடைந்ததாக தரவுகள் காட்டினாலும், கள யதார்த்தம் முற்றிலும் முரண்பட்டதாக உள்ளது. மாநிலப் பொருளாதாரம் (GSDP) கடந்த 2011-12 ஆம் ஆண்டில் ரூ.2.5 லட்சம் கோடியில் இருந்து 2023-24 ஆம் ஆண்டில் ரூ.8.5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. தனிநபர் வருமானமும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இருப்பினும், பீகார் இன்னமும் இந்தியாவின் மிகவும் ஏழ்மையான மாநிலங்களின் பட்டியலில் முன்னணியில் உள்ளது. மனித மேம்பாட்டு குறியீடுகளில் அதன் மோசமான நிலை, நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் ஒரு தடையாக அமைகிறது.
வேலைவாய்ப்பு : இந்த வளர்ச்சி இருந்தபோதிலும், பீகார் மாநிலத்தால் அதன் இளைஞர்களுக்கு போதுமான வேலைவாய்ப்பை உருவாக்க முடியவில்லை. இதன் விளைவாக, மாநில இளைஞர்கள் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் தொழிலாளர்களாக புலம் பெயர்ந்து செல்லும் மிகப்பெரிய மூலமாகவே பீகார் நீடிக்கிறது. இதற்கு காரணம், தமிழ்நாட்டை போலவோ அல்லது குஜராத்தை போலவோ பீகாரில் பெரிய அளவிலான தொழில்மயமாக்கல் (Industrialisation) நடைபெறாததுதான். இங்கு வேளாண்மைத் துறையே 76% பேருக்கு வேலை அளிக்கிறது.
உற்பத்தித் துறையின் பங்களிப்போ மிகக் குறைவாக, மொத்த உற்பத்தியில் வெறும் 7.6% மட்டுமே உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA), சட்டமன்ற தேர்தலில் மிகப் பெரிய வெற்றியுடன் ஆட்சியை தக்கவைத்திருக்கும் இந்தத் தருணத்தில், பீகாரின் பொருளாதாரத்தை உண்மையாக மேம்படுத்த, அதிவேக தொழில்மயமாக்கலை மேற்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
ஆனால், அங்கு தொழில்மயமாக்கலை தடுக்கும் முக்கியக் காரணியாக இருப்பது, உற்பத்தித் துறைக்கு தேவையான வலுவான உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டாளர்-நட்பு சூழல் இல்லாமையே ஆகும்.
பல ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு பெரிய சர்க்கரை ஆலை நிறுவனம் பீகாரில் முதலீடு செய்ய உரிமம் பெற்றது. பீகாரில் விளையும் கரும்பில் அதிக சர்க்கரை சத்து இருந்ததால், இது இலாபகரமான வணிகமாக இருந்திருக்கும். ஆனால், ஆலை அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில், உற்பத்தி செய்த சர்க்கரையை எடுத்துச் செல்ல சாலை வசதியே இல்லை என்பதை அறிந்த அந்த ஆலை நிறுவனம், இத்திட்டத்தையே கைவிட்டது. இத்தகைய உள்கட்டமைப்பு குறைபாடுகளை சரிசெய்யாமல், கொள்கை வகுப்பாளர்கள் தொடர்ந்து இலவசங்கள் மற்றும் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளையே அளித்து வந்தனர். இந்த தேர்தலிலும் தேஜஸ்வி யாதவ் அளித்த ‘ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு அரசு வேலை’ என்ற வாக்குறுதியை மக்கள் நிராகரித்திருப்பதன் மூலம், இந்த உத்தியின் தோல்வி நிரூபணமாகியுள்ளது.