கோவை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் செய்த சிறப்பு சம்பவம்

திருவனந்தபுரம், நவ. 15- கேரள மாநிலம், கோழிக்கோட்டில் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த முதியவரை போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் குறித்த நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவி செய்த கோவை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களின் சேவை நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளா மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் 75 வயதான முதியவர். இவர் அப்பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளார். பணியின்போது, முதியவருக்கு கண்ணில் இரும்பு ராடு பட்டதில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, சக ஊழியர்கள் முதியவரை மீட்டு அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளனர் அங்கு முதியவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் உடனடியாக அவரை மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனைக்கு குறித்த நேரத்தில் கொண்டு செல்ல மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.
அதன்பேரில், கோழிக்கோட்டில் இருந்து முதியவரை அழைத்துக் கொண்டு கோவையை நோக்கி ஆம்புலன்ஸ் புறப்பட்டது. இதற்கிடையே அவசர காலத்தில் உதவுவதற்காக தமிழக ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களால் உருவாக்கப்பட்ட எமெர்ஜென்சி எஸ்கார்ட் என்ற குழுவில் இத்தகவல் பகிரப்பட்டது. ஆம்புலன்ஸ் வாளையாறு வழியாக வரும் தகவலையடுத்து, கோவையைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சதீஷ், பிரபாத், மணி மற்றும் மதுரை வீரன், சந்தானம், பூபதிராஜா, சதா ஆகியோர் 4 ஆம்புலன்ஸ் வாகனங்களுடன் வாளையாறில் இருந்து அந்த கேரள ஆம்புலன்ஸுக்கு பக்க பலமாக உடன் சென்றனர். கேரள ஆம்புலன்ஸின் முன்புறம் 3 ஆம்புலன்ஸுகள் சென்று, போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் வழியை ஏற்படுத்திக் கொடுத்தன.
பின்புறம் ஒரு ஆம்புலன்ஸ் பாதுகாப்பிற்காக வந்தது. ஆம்புலன்ஸ் செல்லும் பகுதிகள் குறித்த விவரங்களை வாட்ஸ்-ஆப் குழு மூலம் கண்காணித்து ஹக்கிம், இருதயராஜ் ஆகிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். இதன் மூலம் போலீசார் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.