
கவுஹாத்தி, நவ. 18- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான வாழ்வா-சாவா போராட்டமாக மாறியுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் காயம் காரணமாக விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இது, ஏற்கனவே முதல் போட்டியில் தோல்வியடைந்துள்ள இந்திய அணிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், 4-ம் பேட்டிங் வரிசையில் யாரைக் களமிறக்குவது என்ற பெரும் குழப்பத்தில் இந்திய அணி நிர்வாகம் சிக்கி உள்ளது. வரலாற்றிலேயே முதல் முறையாகக் கவுஹாத்தியில் உள்ள பர்சபாரா மைதானத்தில் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கப் போட்டியில் இந்தியக் கேப்டன் சுப்மன் கில் பங்கேற்பது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது. கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின்போது, இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் வெறும் 3 பந்துகளை மட்டுமே சந்தித்த நிலையில், 4 ரன்களில் கழுத்து வலி காரணமாக அவர் ‘ரிட்டயர்ட் ஹர்ட்’ ஆகி வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. சுப்மன் கில்லுக்குக் கடுமையான கழுத்து வலி இருப்பதால்,
சில நாட்கள் முழு ஓய்வில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார். இதன் காரணமாக, அவர் கவுஹாத்திக்கு மற்ற அணி வீரர்களுடன் பயணம் செய்ய மாட்டார் என முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. ஒருவேளை சுப்மன் கில் கவுஹாத்திக்கு பயணம் செய்தாலும் போட்டியில் ஆடுவது சந்தேகம் தான். “அவருக்குக் கழுத்தில் கடுமையான வலி உள்ளது. காயத்தின் தன்மை குறித்து மேலும் விவரங்களை வெளியிட இயலாது. அவர் கழுத்துப் பட்டையை (Neck Collar) தொடர்ந்து அணிய வேண்டும்,” என்று இந்திய அணி வட்டாரம் தெரிவித்துள்ளது. “அவருக்கு மூன்று முதல் நான்கு நாட்கள் வரை ஓய்வெடுக்கவும், விமானப் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவரது உடல்நிலையை நாங்கள் தினமும் கண்காணித்து வருகிறோம். செவ்வாய்க்கிழமைக்குள் ஒரு தெளிவான முடிவு தெரியவரும்” என்றும் கூறப்பட்டுள்ளது.




















