
மும்பை, நவ. 19- சிஎஸ்கே அணியில் ரவீந்திர ஜடேஜா வெளியேற்றப்பட்டு நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கான எடிட் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. இதனால் சிஎஸ்கே அணி ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்க, மும்பை அணி ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். 2026ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 16ஆம் தேதி அபுதாபியில் நடக்க உள்ளது. இதனையொட்டி நவம்பர் 15ஆம் தேதியே ஒவ்வொரு அணிகளும் தங்களால் ரீடெய்ன் செய்யப்பட்ட வீரர்கள் மற்றும் ரிலீஸ் செய்யப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டனர். அதற்கு முன்பாக சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் ஜடேஜா மற்றும் சாம் கரண் இருவரும் ராஜஸ்தான் அணிக்கு டிரேட் செய்யப்பட்டனர். அதேபோல் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு டிரேட் செய்யப்பட்டார். நவம்பர் 15ஆம் தேதி காலை இந்த தகவலை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்ட நிலையில், சிஎஸ்கே அணி தரப்பில் ஜடேஜாவுக்கு ஒரு நெகிழ்ச்சியான எடிட் வீடியோ வெளியிடப்பட்டது. அந்த வீடியோவின் முடிவில் ஜடேஜா மற்றும் சிஎஸ்கே அணி இடையிலான அன்பு தொடர்பான விஷயங்கள் இடம்பெற்றன.
அன்றைய தினம் சிஎஸ்கே அணி தரப்பில் சஞ்சு சாம்சனுக்கு எந்தவொரு வீடியோ எடிட்டும் வெளியிடப்படவில்லை. சாதாரணமான போஸ்டர் மூலம் சிஎஸ்கே அணி வரவேற்றது. இது சிஎஸ்கே ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் சிஎஸ்கே அணியின் சோசியல் மீடியா பக்கத்தில் நட்சத்திர வீரர்களை வரவேற்பது எப்போதும் மாஸான வீடியோக்கள் வெளியாகும். இதனால் சிஎஸ்கே சோசியல் மீடியா அட்மினை ரசிகர்கள் திட்ட தொடங்கினர். இந்த நிலையில் நேற்று மாலை சிஎஸ்கே அணியின் சோசியல் மீடியா பக்கத்தில் பேட்ட பராக் பிஜிஎம் உடன் மலையாள நடிகரும், இயக்குநருமான பேசில் ஜோசப் கேமியோ உடன் சஞ்சு சாம்சனுக்கான தரமான மாஸ் எடிட் வீடியோ வெளியிடப்பட்டது. சிஎஸ்கே ஜெர்சியில் சஞ்சு சாம்சனின் என்ட்ரியே மரண மாஸாக அமைந்தது.



















