இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக 33 வயது வீரர்?

மும்பை, நவ. 19- இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி, டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இந்த நிலையில், இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் சுப்மன் கில் மற்றும் துணை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் காயம் காரணமாக இந்தத் தொடரில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்திய அணிக்கு புதிய கேப்டனை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால், அணியில் பல அதிரடி மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று ஒருநாள் போட்டிகள் முறையே நவம்பர் 30 (ராஞ்சி), டிசம்பர் 3 (ராய்ப்பூர்) மற்றும் டிசம்பர் 6 (விசாகப்பட்டினம்) ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன. இதற்கான இந்திய அணி விவரத்தை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) இந்த வாரம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கான இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக சுப்மன் கில்லும், துணை கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரும் நியமிக்கப்பட்டிருந்தனர். ஆனால், தற்போது இருவரும் உடற்தகுதிப் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகின்றனர். சுப்மன் கில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின்போது கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். அவர் இரண்டாவது டெஸ்டில் பங்கேற்பதே சந்தேகத்தில் உள்ள நிலையில், ஒருநாள் தொடரில் அவருக்கு முழு ஓய்வளிக்க அணி நிர்வாகம் முடிவு செய்யலாம். 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கு இன்னும் நீண்ட காலம் இருப்பதால், கில்லின் விஷயத்தில் அவசரம் காட்ட வேண்டாம் என பிசிசிஐ நினைக்கக்கூடும்.