பெங்களூர்: நவம்பர் 19-
பெங்களூரில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் ஐடிதுறையில் புதிய முதலீடுகளை ஈர்க்க பெங்களூரில் ‛பெங்களூரில் டெக் உச்சி மாநாடு 2025’ தொடங்கி நடந்து வரும் நிலையில் பிடதியில் புதிதாக ஐடி சிட்டியை அமைக்கும் திட்டம் உள்ளதாக கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார் அறிவித்துள்ளார்.
பெங்களூரில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் உள்ளன. இதனால் நம்நாட்டின் ‛சிலிக்கான் வேலி’ என்று பெங்களூர் அழைக்கப்பட்டு வருகிறது. பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பெங்களூரில் தங்களின் அலுவலகங்களை அமைத்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பெங்களூரில் ‛பெங்களூர் டெக் உச்சி மாநாடு 2025’ நேற்று தொடங்கியது. இதையொட்டி, நேற்று பெங்களூர் சதாசிவநகரில் உள்ள இல்லத்தில் துணை முதல்வர் டிகே சிவக்குமார் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: பெங்களூரில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் உள்ளன. இதனால் நம்நாட்டின் ‛சிலிக்கான் வேலி’ என்று பெங்களூர் அழைக்கப்பட்டு வருகிறது. பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பெங்களூரில் தங்களின் அலுவலகங்களை அமைத்து வருகின்றனர்.
பல நாடுகளின் தலைவர்கள் என்னை தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் பெங்களூரில் முதலீடு செய்ய உற்சாகமாக உள்ளனர். அவர்களின் முதலீடுகளை நாங்கள் எல்லா வழிகளிலும் ஆதரிக்கிறோம். 60 நாடுகளின் பிரதிநிதிகள் பெங்களூர் தொழில்நுட்ப உச்சி மாநாடு 2025ல் பங்கேற்கின்றனர்.நம் உள்ளூர் மக்களின் திறமை, அவர்களின் புதுமையான திட்டம், தொழில்நுட்பம் மற்றும் ஸ்டார்ட்அப் உள்ளிட்டவற்றை முறையாக ஊக்குவிக்கும்போது அது கர்நாடகாவை புதிய திசைக்கு கொண்டு செல்லும். உலகளவில் போட்டியிடும் வகையில் இளைஞர்களை ஊக்குவிக்கவும், அவர்களுக்காக உழைத்தும் வருகிறேன். வாய்ப்புகளைதேடி கர்நாடகா வருபவர்களுக்கு நாங்கள் ஆதரிப்போம்.
















