சபரிமலையில் நெரிசல்பெண் பலி – தரிசனத்திற்கு 10 மணி நேரம் காத்திருப்பு

திருவனந்தபுரம்: நவ. 19-
சபரிமலையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 58 வயது பெண் பக்தர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், தரிசனத்திற்கு காத்திருக்கும் நேரம் 10 மணி நேரமாக அதிகரித்திருக்கிறது.
உயிர் பலி குறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் கே.ஜெயகுமார் கூறுகையில், “கோயிலில் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த 58 வயது பெண் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இறந்த பெண்ணின் உடல், தேசவம் போர்டு செலவில் ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படும். உயிரிழந்தவர் கோழிக்கோடு மாவட்டம் கொயிலாண்டியைச் சேர்ந்தவர்” என கூறியிருக்கிறார்.
கூட்ட நெரிசல் ஏற்பட்டது எப்படி? கூட்ட நெரிசல் காரணமாக, பக்தர்கள் தரிசனத்திற்காக 10 மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் காத்திருக்கின்றனர். நெரிசல் காரணமாக பலர் தரிசனம் செய்யாமலேயே திரும்பிச் சென்றனர். பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்ததால், ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்து, கோயில் அருகே உள்ள நடைப் பந்தலில் தடுப்புகளைத் தாண்டி பதினெட்டாம் படி நோக்கிச் சென்றனர். இதனால் புனித படிகளுக்கு அருகே மதியம் நெரிசல் ஏற்பட்டது. கூட்டம் அதிகரித்ததால், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். குழந்தைகள் பாதிப்பு கூட்ட நெரிசல் காரணமாக பல குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பாதிக்கப்பட்டனர். சபரிமலை பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு பொறுப்பான கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் எஸ். ஸ்ரீஜித், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கூட்டத்தை சமாளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறார். கோயிலின் நடை அடைக்கும் நேரம் பிற்பகல் 1 மணியிலிருந்து 2 மணி வரை ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. சம்பவம் குறித்து ஸ்ரீஜித் கூறுகையில், “ஒரு நாளைக்கு ஆன்லைன் முன்பதிவு மூலம் 70,000 பக்தர்களும், நேரடி முன்பதிவு மூலம் 20,000 பக்தர்களும் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்ற போதிலும், நேற்றைய தினம் கோயிலுக்கு அதிக பக்தர்கள் வந்ததனர்” என்று கூறியிருக்கிறார்.
தேசவம் போர்டு விளக்கம் தேசவம் போர்டு தலைவர் ஜெயகுமார், “ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ஒரு லட்சம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரங்களில் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். கூட்ட நெரிசலைக் குறைக்க, மற்ற இடங்களில் நேரடி முன்பதிவு மையங்கள் அமைக்கப்படும்” என்றும் கூறியுள்ளார். சபரிமலையில் சரியான ஏற்பாடுகள் மற்றும் வசதிகள் இல்லாதது குறித்து பரவலான விமர்சனங்கள் எழுந்துள்ளன. பல பக்தர்கள் தண்ணீர் மற்றும் உணவு பற்றாக்குறை குறித்து குற்றம்சாட்டியுள்ளனர்.
பேரிடர் மீட்பு படையினர் வருகை சபரிமலையில் நேற்று ஒரே நாளில் சுமார் 1.25 லட்சம் பேர் தரிசனம் செய்திருக்கின்றனர். இதில், 85,0000 பேர் வரை மட்டுமே அடையாளம் காண முடிந்தது என்றும், மீதி பக்தர்களை பதிவு செய்ய முடியவில்லை என்று தேவசம் போர்டு தெரிவித்திருக்கிறது. சபரிமலையில் தினமும் சுமார் 1 லட்சம் பேர் மட்டுமே தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் அதிக அளவில் பக்தர்கள் குவிந்ததே நெரிசலுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. நெரிசலை கட்டுப்படுத்தவும், பக்தர்களுக்கு உதவவும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் சபரிமலைக்கு சென்றிருக்கின்றனர்.