பிரதமர் மோடி கோவை வருகை தொண்டர்கள் குவிந்தனர்

சென்னை: நவ. 19-
கோவை, கொடிசியா மைதானத்தில் நடைபெறும் தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று கோவைக்கு விமானம் மூலம் வருகிறார். கோவை வருகை குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தள பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார். சுற்றுச்சூழலுக்கு உகந்த, ரசாயன பயன்பாடு அல்லாத வேளாண் நடைமுறைகளில் கவனம் செலுத்துவது, பாராட்டத்தக்க விஷயம் என்று தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் மற்றும் தமிழகத்திற்கு பிரதமர் மோடி இன்று பயணம் மேற்கொள்கிறார். ஆந்திரப்பிரதேசத்தின் புட்டபர்த்தியில் உள்ள பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் புனித ஆலயம் மற்றும் மகா சமாதிக்குச் சென்று பிரதமர் மோடி மரியாதை செலுத்தவுள்ளார். பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி காலை 10:30 மணியளவில் பங்கேற்கவுள்ளார்.
இந்நிகழ்ச்சியில், பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் வாழ்க்கை, போதனைகளை கெளரவிக்கும் வகையில் நினைவு நாணயம் மற்றும் தபால் தலைகளின் தொகுப்பை பிரதமர் மோடி வெளியிட்டு, கூட்டத்தில் உரையாற்றுகிறார். கோவையில் தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில், இயற்கை வேளாண்மை உச்சி மாநாடு கோவை கொடிசியா மைதானத்தில் மதியம் 1.30 மணியளவில் நடைபெறவுள்ளது. விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி கோவை வரவுள்ளார். அவரின் வருகை அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கோவையின் முக்கியப் புள்ளிகள் மற்றும் பாஜக நிர்வாகிகளையும் மோடி சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கிவைத்துப் பேசுகிறார். விமானம் மூலம் கோவைக்கு வருகை தரவுள்ள பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.
விமான நிலையத்தில் இருந்து கார் மூலமாக மாநாடு நடைபெறும் கொடிசியா வளாகத்துக்கு பிரதமர் செல்லவுள்ளார். அங்கு மாநாட்டை தொடங்கி வைத்து பேசுகிறார். தொடர்ந்து, சிறப்பாக செயல்பட்ட விவசாயிகளுக்கு விருது வழங்கி கெளரவிக்கவுள்ளார். தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த இயற்கை வேளாண் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடுகிறார். இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் தள பக்கத்தில் தமிழில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: “தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று, நவம்பர் 19 மதியம், கோவை செல்கிறேன். ஏராளமான விவசாயிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இந்தத் துறையுடன் தொடர்புடைய புதிய கண்டுபிடிப்பாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்வார்கள்.