இஸ்லாமாபாத், நவ. 20- ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு நடந்த மோதலில் இந்தியாவின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் பாகிஸ்தானே போர் நிறுத்தம் செய்யுமாறு கோரிக்கை விடுத்திருந்தது. ஆனாலும், கீழே விழுந்தும் மீசையில் மண் ஓட்டவில்லை என்ற கதையாகத் தொடர்ந்து அந்நாட்டுத் தலைவர்கள் திமிராகப் பேசி வருகிறார்கள். இதற்கிடையே இந்தியாவுடனான போர் தொடர்பாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா சில சர்ச்சை கருத்துகளைத் தெரிவித்தார்.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த மே மாதம் மோதல் ஏற்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல்.. இந்தியா மீது பாகிஸ்தான் அத்துமீறித் தாக்குதல் நடத்த முயன்றது. இருப்பினும், அதற்கும் இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. இதனால் அடி வாங்க முடியாமல் பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யுமாறு இந்தியாவுக்குக் கோரிக்கை விடுத்திருந்தது.
பாகிஸ்தானின் திமிர் ஆனாலும், திமிராகப் பேசுவதை இதுவரை அந்நாட்டுத் தலைவர்கள் நிறுத்தவில்லை. தொடர்ந்து இந்தியா குறித்து சர்ச்சை கருத்துகளைக் கூறி வருகிறார்கள்.. இதற்கிடையே இந்தியாவுடன் முழு அளவிலான போர் வெடிக்கும் சாத்தியக்கூறுகளைப் புறக்கணிக்க முடியாது என்று சொல்லி பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். பிராந்திய பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான் உஷார் நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக அந்நாட்டு டிவி சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “எந்த சூழ்நிலையிலும் இந்தியாவை நாங்கள் புறக்கணிக்கவோ அல்லது நம்பவோ இல்லை. இந்தியா உடன் முழு வீச்சில் போர் வெடிக்கலாம் அதற்கு வாய்ப்பில்லை என நிராகரிக்க முடியாது.
மேலும், இந்தியாவில் இருந்து வரும் அச்சுறுத்தல்களையோ, எல்லை தாண்டிய அத்துமீறல்களையோ கூட நிராகரிக்க முடியாது. நாம் முழு விழிப்புடன் இருக்க வேண்டும்” என்று கூறினார்.


















