கோவை: நவம்பர் 20-
கோவையில் இயற்கை வேளாண் மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடியை விடுவித்தார். மேலும், விவசாயத்தில் பல்லடுக்கு வேளாண்மையை ஊக்குவிக்க மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மத்திய அரசின் சார்பில் பிரதம மந்திரி விவசாயிகளுக்கான கவுரவிப்பு நிதி திட்டத்தின் கீழ் (பிஎம் – கிஸான்) ரூ.18 ஆயிரம் கோடி நிதி உதவித் தொகை விடுவிக்கும் நிகழ்வு, தமிழ்நாடு இயற்கை உழவர் மற்றும் ஆர்வலர்கள் கூட்டுக் குழு சார்பில் 3 நாள் இயற்கை விவசாயிகள் மாநாட்டு தொடக்க விழா ஆகியவை கோவை கொடிசியா தொழிற்காட்சி அரங்கில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியை தொடங்கிவைக்க பிரதமர் மோடி நேற்று கோவை வந்தார்.அவருக்கு வழிநெடுக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பிரதமர் மோடி வேளாண் மாநாட்டை தொடங்கி வைத்தார். மேலும், பிஎம் கிசான் திட்டத்தின் கீழ், 21-வது தவணையாக நாடு முழுவதும் 9 கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.18 ஆயிரம் கோடியை விடுவித்தார். தொடர்ந்து இயற்கை விவசாயத்தில் சிறப்பாக பணியாற்றிய 7 விவசாயிகளுக்கு விருதுகளை வழங்கினார்.
அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது: எனக்கு வரவேற்பு கொடுக்கும் போது, விவசாயிகள் தங்களது மேல் துண்டை சுழற்றினர். அதைப் பார்த்த போது பிஹாரின் காற்று இங்கேயும் வீசுகிறதோ என்று என் மனம் அளவளாவியது. கோவை என்பது கலாச்சாரம், கனிவு ஆகியவற்றை சொந்த மாக்கிக் கொண்ட பூமி. தென் இந்தியாவின் தொழில் முனைவோர் ஆற்றலின் சக்தி பீடம். இங்கு இருக்கும் ஜவுளித் துறை தேசத்தின் பொருளாதாரத்துக்கு பெரும் பங்களிப்பு அளிக்கிறது. இங்கு எம்.பி. ஆக இருந்த சி.பி. ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவராகி அனைவருக்கும் வழிகாட்டி வருகிறார்.
இயற்கை விவசாயம் மிகவும் சிறப்பானது. இந்த மாநாட்டில் உள்ள அரங்குகளை பார்த்தேன். ஒருவர் பொறியியல் பட்டம் பெற்ற பிறகு விவசாயத்துக்கு வந்திருக்கிறார். ஒருவர் இஸ்ரோவை விட்டுவிட்டு வேளாண் தொழிலுக்கு வந்துள்ளார். இந்த வேளையில் தமிழ்நாட்டின் வேளாண் பெருமக்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்களை உங்களது துணிச்சலுக்காக காணிக்கையாக்குகிறேன்.
நாட்டின் அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.18 ஆயிரம் கோடி இங்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் கூட பல லட்சம் விவசாயிகளின் வங்கிகணக்கில் பிரதம மந்திரியின் விவசாய கவுரவ நிதி அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த திட்டத்தில் ரூ.4 லட்சம் கோடி விவசாயிகளுக்கு நேரடியாக சேர்ந்துள்ளது. இந்த தொகை விவசாயத்துடன் தொடர்புடைய பல்வேறு பணிகளை செய்ய உதவியாக அமைந்துள்ளது.

















