
புதுடெல்லி:நவம்பர் 20- பழைய (1947) ஒரு ரூபாய் நாணயம் முகப்பில் பொறிக்கப்பட்ட கைக்கடிகாரத்தை பிரதமர் நரேந்திர மோடி அணிந்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வெற்றிகரமான அரசியல்வாதி என்பதை தாண்டி அற்புதமான ஃபேஷன் உணர்வுக்கு சொந்தக்காரர் பிரதமர் மோடி. இதற்கு ஒவ்வொரு ஆண்டு சுதந்திர தினத்தின்போதும் டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றும்போது பிரதமர் மோடி அணியும் தலைப்பாகையே சாட்சி.
அந்த வகையில் தற்போது பிரதமர் மோடி தனது கைகளில் அணிந்திருக்கும் கடிகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. அந்த கடிகாரத்தின் முகப்பில் மிகவும் அரிய பழைமையான (1947) ஒரு ரூபாய் நாணயம் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த நாணயத்தின் நடுவே இந்தியாவின் சுதந்திர பயணத்தை குறிக்கும் மற்றும் நாட்டின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை பிரதிபலிக்கும் வகையிலான புலியின் உருவம் இடம்பெற்றுள்ளது.
சுமார் ரூ.55,000 முதல் ரூ.60,000 வரை விலை கொண்ட அந்த ரோமன் பாக் பிராண்ட் கைக் கடிகாரத்தை ஜெய்பூரைச் சேர்ந்த நிறுவனம் தயாரித்துள்ளது. இது, 43 மி.மீ அளவுள்ள துருப்பிடிக்காத எஃகினால் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஒரு ரூபாய் நாணயம் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் அச்சிடப்பட்ட கடைசி நாணயம் என்பதால் அது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. 1946 (இரண்டாம் பாதி) மற்றும் 1947-க்கு இடையில் மட்டுமே இந்த ஒரு ரூபாய் நாணயம் அச்சிடப்பட்டது.
இது குறித்து வாட்ச் கம்பெனியின் நிறுவனர் கவுரவ் மேத்தா கூறுகையில், “சுதேசி உணர்வு எழுச்சி பெற்று வரும் இந்த நேரத்தில் பிரதமர் மோடி எங்கள் நிறுவனத்தின் கைக் கடிகாரத்தை அணிந்துள்ளது அளவில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.


















