கவர்னருக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

சென்னை: நவம்பர் 20-
மசோதாக்கள் மீது முடிவெடுப்பதற்கு குடியரசு தலைவர் மற்றும் ஆளுநருக்கு நீதிமன்றங்கள் காலக்கெடுவை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாடு வழக்கில் 2 நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த அத்தகைய உத்தரவு அரசியலமைப்பிற்கு எதிரானது என்று உத்தரவிட்டு உள்ளது.
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலவரம்பு நிர்ணயித்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் விளக்கம் கோரிய மனு மீது இன்று தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், பி.எஸ்.நரசிம்மா, அதுல்.S.சந்தூர்கர் ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது.
அதில், மசோதாக்கள் மீது முடிவெடுப்பதற்கு குடியரசு தலைவர் மற்றும் ஆளுநருக்கு நீதிமன்றங்கள் காலக்கெடுவை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவில் பின்வரும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.
ஆளுநரின் அதிகாரம் (பிரிவு 200): பிரிவு 200-இன் கீழ், ஆளுநருக்கு ஒரு மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பது (Assent), மசோதாவை நிறுத்தி வைத்துத் திருப்பி அனுப்புவது (Withhold and return) அல்லது மசோதாவை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்புவது (Refer the Bill to the President) ஆகிய மூன்று விருப்பங்கள் மட்டுமே உள்ளன. பிரிவு 200-இன் கீழ் ஆளுநருக்கு நான்காவது விருப்பம் எதுவும் இல்லை.
ஆளுநரின் விருப்புரிமை: ஒரு மசோதாவைக் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்புவதற்கோ அல்லது மறுபரிசீலனைக்காக நிறுத்தி வைத்துத் திருப்பி அனுப்புவதற்கோ ஆளுநர் விருப்புரிமையைப் (discretion) பயன்படுத்தலாம். அதிகாரப் பிரிவினை (Separation of powers) என்பது அரசியலமைப்பின் அடிப்படை அமைப்பாகும் (basic structure). ஆளுநரிடம் நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ‘அனுமதிக்கப்பட்டதாகக் கருதப்படும் ஒப்புதலை’ நீதிமன்றங்கள் வழங்க முடியாது. ஒரு மசோதா நிலுவையில் இருந்தால் அதை கோர்ட்டே ஒப்புதல் அளிக்க முடியாது.
பிரிவு 200-இன் கீழ் ஆளுநரின் செயல்பாட்டைக் குறித்து நீதிமன்றம் விசாரிக்க முடியாது (cannot be justiciable). ஆனால் சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது ஆளுநர்கள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதோ அல்லது நீண்ட கால தாமதம் செய்வதோ நீதிமன்ற ஆய்வுக்கு (judicial scrutiny) உட்படுத்தப்படும்.
ஆளுநரின் அலுவலகத்தில் ஒரு மசோதா குறித்து அளவுக்கு அதிகமான தாமதம் (inordinate delay) இருந்தால், அரசியலமைப்பு நீதிமன்றம் ஆளுநருக்கு அந்த மசோதாவின் மீது நடவடிக்கை எடுக்க வழிகாட்டுதல்களை (directions) வழங்க முடியும். இருப்பினும், ஒரு குறிப்பிட்ட வழியில் (a particular way) செயல்படுமாறு நீதிமன்றம் வழிகாட்டலை வழங்க முடியாது, என்று உத்தரவில் கூறி உள்ளது. வழக்கு பின்னணி தமிழ்நாடு அரசு, சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் வைத்துள்ளதாக கடந்த 2023ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பில், மாநில அரசின் மசோதாக்கள் குறித்து ஒரு மாதத்துக்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும். மாநில ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் குறித்து குடியரசுத் தலைவர் மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என காலவரம்பை நிர்ணயம் செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, மசோதா விவகாரத்தில் ஆளுநர்களுக்கும் குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா? என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, 14 கேள்விகளை எழுப்பி விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியிருந்தார். இந்த வழக்கில்தான் மசோதாக்கள் மீது முடிவெடுப்பதற்கு குடியரசு தலைவர் மற்றும் ஆளுநருக்கு நீதிமன்றங்கள் காலக்கெடுவை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாடு வழக்கில் 2 நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த அத்தகைய உத்தரவு அரசியலமைப்பிற்கு எதிரானது என்று உத்தரவிட்டு உள்ளது.