வங்கதேச விக்கெட் கீப்பர் செய்த தவறு

தோஹா, நவ. 22- 2025 ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா ‘ஏ’ மற்றும் வங்கதேசம் ‘ஏ’ அணிகள் மோதிய போட்டியில் வங்கதேச அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்தப் போட்டி சூப்பர் ஓவருக்கு செல்லும் முன்பே வங்கதேசம் வெற்றி பெறும் நிலையில் இருந்தது. ஆனால், போட்டியின் கடைசிப் பந்தில் வங்கதேச விக்கெட் கீப்பர் அக்பர் அலி செய்த ஒரு மிகப் பெரிய தவறுதான் இந்திய அணிக்கு உயிர் கொடுத்து போட்டியை சூப்பர் ஓவர் வரை கொண்டு சென்றது. 194 ரன்கள் என்ற கடினமான இலக்கைத் துரத்திய இந்தியா ‘ஏ’ அணிக்கு, கடைசி ஓவரில் வெற்றிபெற 16 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் அசுதோஷ் சர்மா மற்றும் நேஹல் வதேரா இருந்தனர்.
வங்கதேசத்தின் ரகிபுல் ஹசன் கடைசி ஓவரை வீசினார். முதல் 4 பந்துகளில் அசுதோஷ் சர்மா ஒரு சிக்ஸர் மற்றும் ஃபீல்டரின் உதவியால் ஒரு பவுண்டரி விளாச, ஆட்டம் இந்தியாவின் பக்கம் திரும்பியது. 5-வது பந்தில் அசுதோஷ் சர்மா 13 ரன்கள் எடுத்த நிலையில் போல்ட் ஆகி வெளியேறினார். கடைசி பந்தில் வெற்றிக்கு 4 ரன்கள் தேவை. 3 ரன்கள் எடுத்தால் சூப்பர் ஓவர் என்ற நிலை. களத்தில் புதிதாக வந்த ஹர்ஷ் துபே நின்றார்.
கீப்பர் அக்பர் அலி செய்த முட்டாள்தனம் ரகிபுல் ஹசன் வீசிய கடைசிப் பந்தை ஹர்ஷ் துபே லாங்-ஆன் திசையில் தூக்கி அடித்தார். பந்து எல்லைக்கோட்டைத் தொடவில்லை. அங்கிருந்த ஃபீல்டர் பந்தைப் பிடித்து விக்கெட் கீப்பர் அக்பர் அலியை நோக்கி வீசினார்.
அதற்குள் பேட்ஸ்மேன்கள் இரண்டு ரன்கள் ஓடி முடித்திருந்தனர். பந்து கீப்பர் கைக்கு வந்தபோது, இந்திய வீரர்கள் மூன்றாவது ரன்னை ஓட முயற்சிக்கவில்லை. ஆனால், விக்கெட் கீப்பர் அக்பர் அலி பதற்றத்தில் நிதானத்தை இழந்தார். பந்தை கையில் வாங்கிய அவர், பேட்ஸ்மேன் ரன்-அவுட் ஆகும் நிலையில் இல்லாதபோதும், மிக அருகில் இருந்துகொண்டே ஸ்டம்பை நோக்கி பந்தை வேகமாக எறிந்தார். துரதிர்ஷ்டவசமாக பந்து ஸ்டம்பில் படாமல் விலகிச் சென்றது. ஸ்டம்பிற்குப் பின்னால் பந்தைப் பிடிக்க யாரும் இல்லாததால், இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட இந்திய வீரர்கள் உடனடியாக மூன்றாவது ரன்னை ஓடி முடித்தனர். அக்பர் அலியின் இந்தத் தேவையற்ற செயலால் போட்டி ‘டை’ ஆகி சூப்பர் ஓவருக்குச் சென்றது. போட்டியின் முடிவில் சக வீரர்களே கீப்பரிடம், “3 ரன்கள் கொடுத்தால் சூப்பர் ஓவர் வரும் என்று தெரியாதா?” என அதிருப்தியை வெளிப்படுத்தினர்.