திமுகவுடன் தொகுதி உடன்பாடு குழு – ப. சிதம்பரம் வரவேற்பு

சென்னை: 2026 சட்டசபை தேர்தலுக்கு திமுக உடன் தொகுதி உடன்பாடு நடத்த காங்கிரஸ் சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், காங்கிரஸ் தலைமையின் இந்த முடிவை வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம். தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் இடையேயான கூட்டணி நீண்ட காலமாக நீடித்து வரும் நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க முயற்சிகள் நடந்து வருவதாக பேச்சுகள் கிளம்பின. அதிக சீட், ஆட்சியில் பங்கு கொடுத்தால் திமுகவுடன் கூட்டணி என்றும், இல்லையென்றால் தவெகவுடன் கூட்டணி அமைக்கப்படும் என சில காங்கிரஸ் தலைவர்கள் வெளிப்படையாகவே பேசி தலைமைக்கும் அழுத்தம் கொடுத்து வந்தனர். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு ராகுல் காந்தி, விஜய்யை தொலைபேசியில் அழைத்து ஆறுதல் தெரிவித்த பிறகு தவெக காங்கிரஸ் கூட்டணி குறித்த பேச்சுகள் மேலும் விவாதங்களை கிளப்பியது. எனினும், காங்கிரஸ் தலைமை, திமுக உடன் கூட்டணி என்பதில் மாற்றமில்லை என்ற நிலைப்பாட்டிலேயே உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. பீகார் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததன் காரணமாக காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூடுதல் தொகுதிகள் என கேட்டு வந்த பேர வலிமை குறையலாம் என்கிற சூழல் உருவானது. பீகார் தோல்வியால் தமிழக திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கான சீட்டுக்களை திமுக முன்பைவிட குறைக்கலாம் என்கிற பேச்சுகளும் கிளம்பின. இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் சிலர், விஜய் கூட்டணிக்கு இணைவது போன்ற பல கருத்துக்களை கூறி வந்தனர். இந்த நிலையில் தவெக உடன் கூட்டணி என்கிற பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்த விவாதங்கள் மேலும் தொடர்ந்தால் அது திமுக – காங்கிரஸ் கூட்டணி இடையே மன வருத்தங்களை அதிகரிக்கும் என காங்கிரஸ் டெல்லி தலைமை முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.