
புதுடில்லி, நவ. 22-கடந்த 2020 ஆம் ஆண்டு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன ராணுவத்தினர் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இந்த மோதலை அடுத்து சீனா மற்றும் இந்தியா இடையிலான உறவில் மிகப்பெரிய விரிசல் விழுந்தது. இந்தியா சீனா உடனான உறவுகளை துண்டித்தது. சீனாவுக்கு நேரடி விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. குறிப்பாக மத்திய அரசு சீனர்களுக்கான சுற்றுலா விசாவை நிறுத்தியது. கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக சீனர்களுக்கு இந்தியாவில் சுற்றுலா விசா வழங்கப்படுவது கிடையாது. ஆனால் அண்மைக்காலமாக மீண்டும் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி ஷாங்காய் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்த ஆண்டு சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார். அப்பொழுது முதல் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு வலுப்பெற்று வருகிறது . அமெரிக்காவின் வர்த்தக மோதலுக்கு மத்தியில் இந்தியாவும் சீனாவும் நெருங்கி வர தொடங்கி இருக்கின்றன . இதன் ஒரு பகுதியாக மீண்டும் சீனர்களுக்கு சுற்றுலா விசா வழங்க மத்திய அரசு அனுமதி தந்திருக்கிறது . இந்தியா -சீனா இடையே ஏற்பட்டிருக்க கூடிய உறவை வலுப்படுத்தும் நோக்கில் சுற்றுலா விசா வழங்குவதற்கான நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. ஏற்கனவே சீன நாட்டில் உள்ள தூதரகங்களில் மட்டும் இந்த சேவை தொடங்கப்பட்ட நிலையில், தற்போது உலகம் முழுவதும் வசிக்கும் சீனர்கள் இந்த சேவையை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது .















