சண்டிகர் எங்களுக்குத்தான்.. பாய்ந்து அடித்த பஞ்சாப்.. பதுங்கும் பாஜக

டெல்லி, நவ. 24- பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் பல்வேறு வழியில் அதிகாரத்தை பயன்படுத்தி பல்வேறு வழியில் தொந்தரவுகளை கொடுப்பதை மத்திய பாஜக அரசு வாடிக்கையாக வைத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் சண்டிகர் யூனியன் பிரதேசம் நிர்வாகத்தில் குடியரசு தலைவருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் அரசியலமைப்பு பிரிவு 240 கொண்டு வருவதற்கான மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு பஞ்சாப்பில் இருந்து கடுமையான எதிர்ப்புகள் எழுந்ததால், மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டு கடந்த 1966 ஆம் ஆண்டு ஹரியானா உருவாக்கப்பட்டது. ஹரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய இரண்டு மாநிலங்களின் பொதுவான தலைநகராக சண்டிகர் இருந்து வருகிறது. சண்டிகர் தங்களுக்கு தான் சொந்தம் என்று பஞ்சாப், ஹரியானா இருவரும் உரிமை கோரி வருகிறார்கள். இந்த பிரச்சனையை சரி செய்வதற்காக சண்டிகர் யூனியன் பிரேதசமாக உருவாக்கப்பட்டது. சண்டிகரில் அரசியலமைப்பு பிரிவு 240 நிர்வாக ரீதியாக பஞ்சாப் மாநில ஆளுநரே சண்டிகரின் நிர்வாக அதிகாரியாக இருந்து வருகிறார். நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடர் வருகிற டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்குகிறது. அப்போது அரசியலமைப்பு பிரிவு 240 கீழ் சண்டிகரை கொண்டு வருவதற்கான மசோதாவை தாக்கல் செய்வதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பஞ்சாப் மாநிலத்தில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. இதன் மூலம் மற்ற யூனியன் பிரேதசங்களில் இருக்கும் நடைமுறையை போல, சண்டிகர் நிர்வாக அதிகாரியை நியமிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்படும். பாஜக ஆட்சியில் இல்லாத பஞ்சாப்பில் அரசியல் ரீதியாக குழப்பங்களை ஏற்படுத்துவதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.