கே.எல்.ராகுலுக்கு கேப்டன்சி.. அப்ப சுப்மன் கில் பதவி போச்சா?

மும்பை, நவ. 24- ென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாகச் மூத்த வீரர் கே.எல். ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். வழக்கமான கேப்டன் சுப்மன் கில் காயம் காரணமாக விலகியுள்ள நிலையில், இந்த பொறுப்பு ராகுல் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், டெஸ்ட் போட்டியில் கேப்டனாகச் செயல்படும் ரிஷப் பண்ட் ஏன் ஒருநாள் போட்டி கேப்டனாகப் பரிசீலிக்கப்படவில்லை என்பதற்கான காரணமும் தற்போது வெளியாகியுள்ளது.ரோஹித் சர்மாவின் வயதை சுட்டிக் காட்டி, 2027 உலகக் கோப்பையை மனதில் வைத்து 25 வயதான சுப்மன் கில் சமீபத்தில்தான் நிரந்தர ஒருநாள் அணி கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால், கடந்த நவம்பர் 15-ம் தேதி கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் போது அவருக்குக் கழுத்தில் காயம் ஏற்பட்டது. இந்தக் காயம் காரணமாக அவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளார். அணியின் துணை கேப்டனான ஸ்ரேயாஸ் ஐயரும் காயத்தால் அவதிப்பட்டு வருவதால், தேர்வுக்குழு கே.எல். ராகுலைத் தற்காலிக கேப்டனாக நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சுப்மன் கில் பதவிக்கு ஆபத்தா? கே.எல். ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதால், சுப்மன் கில்லின் கேப்டன்சிக்கு ஏதேனும் ஆபத்து உள்ளதா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. ஆனால், இது வெறும் “தற்காலிக ஏற்பாடு” மட்டுமே என்று பிசிசிஐ வட்டாரங்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளன. இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய பிசிசிஐ அதிகாரி ஒருவர், “ராகுலின் இந்த நியமனம் இந்த ஒரு தொடருக்கு மட்டுமே. இது சுப்மன் கில்லின் நீண்ட காலத் திட்டங்களை எந்த வகையிலும் பாதிக்காது. கில் காயத்திலிருந்து குணமடைந்த பிறகு, ஜனவரி 2026-ல் நடைபெறும் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் மீண்டும் கேப்டனாகத் திரும்புவார்” என்று உறுதிப்படுத்தியுள்ளார். ரிஷப் பண்ட் புறக்கணிப்பு ஏன்? தற்போது கவுகாத்தியில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் இல்லாததால், ரிஷப் பண்ட் தான் இந்திய அணியை வழிநடத்தி வருகிறார். அப்படி இருக்கையில், ஒருநாள் தொடருக்கும் அவரையே கேப்டனாக நியமித்திருக்கலாமே என்ற கேள்வி எழுந்தது. இதற்கு பதிலளித்துள்ள பிசிசிஐ அதிகாரி, “ரிஷப் பண்ட் கடந்த ஓராண்டில் ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார் (கடந்த ஆண்டு இலங்கை தொடரில் ஆடினார்). சாம்பியன்ஸ் டிராபி அணியில் அவர் இருந்தாலும் ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை. ஒருநாள் ஃபார்மெட்டில் அவர் போதிய அளவு சமீபத்தில் ஆடாததே அவர் கேப்டனாகப் பரிசீலிக்கப்படாததற்கு முக்கிய காரணம்” என்று விளக்கம் அளித்தார். இதன்படி, கே.எல். ராகுல் தலைமையிலான இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. சுப்மன் கில் நியூசிலாந்துக்கு எதிரான அடுத்த தொடரில் முழு உடற்தகுதியுடன் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.