ஓராண்டு வேலை – பணிக்கொடை

புதுடெல்லி: நவம்பர் 25-
பணிக்கொடையைப் பெற ஓராண்டு வேலை செய்தாலே போதும் என்று புதிய தொழிலாளர் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தொழிலாளர் சட்டங்கள் கடந்த 1930 – 1950 காலகட்டத்தில் வரையறுக்கப்பட்டன. இதன்படி 29 மத்திய தொழிலாளர் சட்டங்கள் நடைமுறையில் இருந்தன. இவற்றுக்கு மாற்றாக ஊதிய விதி-2019, தொழில் துறை தொடர்பு விதி-2020, சமூகப் பாதுகாப்பு விதி-2020, பணிப் பாதுகாப்பு-2020 ஆகிய 4 புதிய சட்டங்கள் கடந்த 21-ம் தேதி அமல்படுத்தப்பட்டன. இந்த புதிய சட்டங்களில் தொழிலாளர்களின் நலனுக்காக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து மத்திய தொழிலாளர் நலத் துறை அதிகாரிகள் கூறியதாவது: பழைய சட்டங்களின்படி ஒரு நிறுவனத்தில் ஓர் ஊழியர் 5 ஆண்டுகள் வேலை செய்தால் மட்டுமே பணிக்கொடை (கிராஜுவிட்டி) பெற முடியும். ஆனால், புதிய சட்ட விதிகளின்படி ஓராண்டு வேலை செய்தாலே கண்டிப்பாக பணிக்கொடை வழங்க வேண்டும்.
பணிக்காலத்தின்போது ஓர் ஊழியர் உயிரிழந்தால் அவரது வாரிசுதாரருக்கு பணிக்கொடை வழங்க வேண்டும். புதிய சட்டங்களில் பணிக்கொடை உச்ச வரம்பு ரூ.20 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த தொகைக்கு வரிவிலக்கு சலுகையும் வழங்கப்பட்டுள்ளது. ஒரு நிறுவனம் தனது ஊழியருக்கு 30 நாட்களுக்குள் பணிக்கொடை வழங்க வேண்டும். ஒரு மாத அவகாசத்தை தாண்டினால் 10 சதவீத ஆண்டு வட்டியுடன் பணிக்கொடையை வழங்க வேண்டும்.
புதிய சட்ட விதிகளின்படி, நிரந்தர ஊழியர்களைப்போல, ஒப்பந்த ஊழியர்களுக்கும் விடுப்பு, மருத்துவ வசதி, இபிஎஃப், இஎஸ்ஐ உள்ளிட்ட உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.
பழைய சட்ட விதிகளின்படி, ஊழியரின் சம்பளத்தில் 30 சதவீதம் மட்டுமே அடிப்படை சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டது. புதிய சட்ட விதிகளின்படி இது 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், இபிஎஃப் பிடித்தம் அதிகரிக்கும்.
இதன்காரணமாக, தொழிலாளர்களுக்கு கையில் கிடைக்கும் சம்பளம் குறையும். ஆனால், பணி ஓய்வுக் காலத்தில் இபிஎஃப், பணிக்கொடை அதிகமாக கிடைக்கும்.