சென்னைக்கு வெள்ள அபாயம்? டிசம்பர் 1 வரை மழை

சென்னை: நவம்பர் 25-
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஏற்கனவே அறிவிப்புகள் வெளியாகியிருந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, நெல்லை,தென்காசி, தேனி (மலைப் பகுதிகள்) ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் அமுதா செய்தியாளர்களிடம் பேசும்போது, “தென் மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வலுப்பெறும் மலாக்கா ஜலசந்தி மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நிலவரப்படி மலேஷியா மற்றும் அதை ஒட்டிய மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவுகிறது.
இது, மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இது, மேலும் அதே திசையில் நகர்ந்து, இன்று தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக உருவெடுக்கும். குமரிக்கடல் – கீழடுக்கு சுழற்சி குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை, தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இதுவும் படிப்படியாக வலுப்பெற வாய்ப்புள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதில், அந்தமான் அருகில் காணப்படும் சுழற்சி புயலாக உருவாக வாய்ப்புள்ள நிலையில், குமரிக்கடல் பகுதியில் உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியுடன் இணைந்து, வலுவான புயலாக மாறுமா என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம்.
ஒரு வாரம் கனமழை இன்று அல்லது நாளை இதில் முன்னேற்றம் என்ன என்பது தெரிந்து விடும். எனினும், தென் மாவட்டங்களில் ஒரு வாரத்துக்கு கனமழை தொடர வாய்ப்புள்ளது.
சென்னைக்கு வெள்ளம்? இதனிடையே, தனியார் வானிலை ஆய்வாளர் ந.செல்வக்குமார் பிரபல சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், இலங்கை காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, திருவள்ளூர், டெல்டா மாவட்டங்களில் நவ.28 முதல் டிச.1 வரை தொடர் மழைபெய்யக் கூடும் என்றும் இதனால் பெரும் வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறியிருக்கிறார். இலங்கைக்கு தெற்கு, தென்மேற்கு பகுதி மற்றும் தெற்கு மன்னார் வளைகுடா பகுதியில் கடலில் உள்ள காற்று சுழற்சிகள் இலங்கையின் தென்கிழக்கு முனையை ஒட்டி இன்று தாழ்வுப்பகுதியாகி, அதே இடத்தில் நீடித்து, தாழ்வு மண்டலம் வரை தீவிரமடைந்து மிகமிக மெதுவாக இலங்கையின் கிழக்கு கரையை ஒட்டி நாளை முதல் 28ம் தேதி வரை வடக்கு நோக்கி நகர்ந்து ஒட்டுமொத்த இலங்கைக்கும் வரலாறு காணாத கடும் வெள்ளம், நிலச்சரிவை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. டிசம்பர் 1 வரை மழை இதனால், நவம்பர் 26 பிற்பகல் முதல் டெல்டா மற்றும் தென் கடலோரத்தில் லேசான மழையாக தொடங்கும். 27-ம் தேதி டெல்டாவில் மழை சற்று தீவிரம் அடைந்து, 28, 29, 30 ஆகிய தேதிகளில் டெல்டா, சென்னை, திருவள்ளூர் வரை வடகடலோரப் பகுதிகளுக்கு தொடர் மழையை தரும்.. இதனால் வெள்ளப் பாதிப்புகள் ஏற்படக் கூடும். சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் டிச.1ம் தேதியும் மழை தொடர வாய்ப்புள்ளது” என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.