மார்கோ வேகத்தில் 201 ரன்களில் சுருண்டது இந்திய அணி

குவாஹாட்டி, நவ. 25- தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, மார்கோ யான்சனின் அபார பந்து வீச்சால் 201 ரன்களுக்கு ஆட்டமிழந்து பாலோ- ஆன் ஆனது. எனினும், பாலோ-ஆன் கொடுக்காமல் தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 314 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. குவாஹாட்டி பர்சபாரா மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 489 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக 7-வது வீரராக களமிறங்கிய செனுரன் முத்துசாமி 109 ரன்களும், 9-வது வீரராக களமிறங்கிய மார்கோ யான்சன் 93 ரன்களும் விளாசினர். இதையடுத்து விளையாடிய இந்திய அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 6.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 9 ரன்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் 2, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 7 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இன்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இந்திய அணியானது மார்கோ யான்சனின் ஷார்ட் பால் வியூகத்திலும், சைமன் ஹார்மரிலும் சுழலிலும் சிக்கி 83.5 ஓவர்களில் 201 ரன்களுக்கு ஆட்டமிழந்து பாலோ-ஆன் ஆனது. யஷஸ்வி ஜெய்ஸ்வால், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரை தவிர மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் யாரிடம் இருந்து சிறந்த பங்களிப்பு வெளிப்படவில்லை. முதல் விக்கெட்டுக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் – கே.எல்.ராகுல் ஜோடி 21.3 ஓவர்களில் 65 ரன்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் 63 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் எடுத்த நிலையில் கேசவ் மஹாராஜ் பந்தில் சிலிப் திசையில் நின்ற எய்டன் மார்க்ரமிடம் பிடிகொடுத்து வெளியேறினார். தனது 13-வது அரை சதத்தை கடந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 97 பந்துகளில், ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் எடுத்த நிலையில் சைமன் ஹார்மர் ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே வேகம் குறைத்து வீசிய பந்தை பேக்வேர்டு பாயின்ட் திசையில் அடித்த போது யார்கோ யான்சன் டைவ் அடித்து மிக தாழ்வாக வந்த பந்தை அற்புதமாக கேட்ச் செய்தார். அங்கிருந்து இந்திய அணியின் சரிவு தொடங்கியது. சாய் சுதர்சன் 40 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் எடுத்த நிலையில் சைமன் ஹார்மர் வீசிய பந்தை லெக் திசையில் விளாச முயன்றார். ஆனால் அதை மிட்விக்கெட் திசையில் பாய்ந்து அபாரமாக கேட்ச் செய்தார் ரியான் ரிக்கெல்டன். இதையடுத்து மார்கோ யான்சன் ஆடுகளத்தின் தன்மையை சரியாக பயன்படுத்தி ஷாட்-பால்கள் வீசினார். இதில் முதலில் துருவ் ஜூரெல் சிக்கினார். 11 பந்துகளை சந்தித்த துருவ் ஜூரெல் ரன் ஏதும் எடுக்காமல் மார்கோ யான்சன் வீசிய பந்தை மிட் ஆன் திசையில் அடித்த போது கேசவ் மஹாராஜிடம் கேட்ச் ஆனது. பொறுப்புடன் விளையாடிய கேப்டன் ரிஷப் பந்த் 7 ரன்கள் எடுத்த நிலையில் மார்கோ யான்சன் வீசிய பந்தை கிரீஸை விட்டு வெளியே வந்து பெரிய ஷாட் விளையாட முயன்றார்.