ரூ.43,844 கோடியில் 158 ஒப்பந்தம்

கோவை: நவம்பர் 26-
தமிழ்நாடு அரசின் தொழில்துறை சார்பில், தூத்துக்குடி, ஓசூர் ஆகிய இடங்களில் ‘தமிழ்நாடு ரைசிங்’ தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மேற்கு மண்டல மாவட்டங்களை உள்ளடக்கிய கோவையில்
‘டிஎன் ரைசிங்’ தொழில் முதலீட்டாளர் மாநாடு நேற்று மாலை நடைபெற்றது. மாநாட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்தார். தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வரவேற்றார். அதைத்தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தொழில் முதலீட்டாளர்கள், அரசிடம் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இங்கு வந்துள்ள முதலீட்டாளர்களாகிய நீங்கள், கடந்த நான்காண்டுகளில் கடுமையான உழைப்பை செலுத்தி, ஏராளமான முதலீட்டாளர்கள், தொழில் நிறுவனங்களின் நம்பிக்கையை பெற்று, இந்தியாவிலேயே அதிகமாக 11.1 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியை சாத்தியப்படுத்தி உள்ள தமிழ்நாட்டுக்கு வந்துள்ளீர்கள்.
இதுவரை நடத்திய 17 முதலீட்டாளர்கள் மாநாட்டின் விளைவாக 1,016 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது கடந்த ஆட்சிக்காலத்தில் கடைசி 4 ஆண்டுகளை விட இரண்டரை மடங்கு அதிகம். இந்த புரிந்துணர்வு மூலமாக 11 லட்சத்து 40,731 கோடி ரூபாய் முதலீடு உறுதி செய்யப்பட்டு, நேரடியாகவும், மறைமுகமாகவும் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நம் திராவிட மாடல் அரசு போட்டுள்ள 1,016 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 809 திட்டங்கள் பல்வேறு நிலைகளில் செயல்பாட்டில் உள்ளன. புதிய ஐடியாக்களோடு இளைஞர்கள் தொழில் தொடங்க முன்வந்தால் திராவிட மாடல் அரசு அவர்களுக்கு ஆதரவு அளிக்கிறது. கடந்த மாதம் கூட இதே கோவைக்கு வந்து உலக புத்தொழில் மாநாடு தொடங்கி வைத்தோம். சின்ன சின்ன நகரங்களுக்கு கூட சென்று ஸ்டார்ட் அப் தமிழ்நாடு மூலமாக இளைஞர்களை தொழில் தொடங்க ஊக்குவிக்கிறோம். அதனால் தற்போது தமிழ்நாட்டில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 12,663 ஆக உயர்ந்துள்ளது.