
ராவல்பிண்டி, நவ. 26- பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரில் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வந்த இலங்கை அணி, தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. தொடக்க வீரர் பதும் நிசாங்கா 98 ரன்கள் விளாசி கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நிற்க, ஜிம்பாப்வே அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி ஊதித்தள்ளியது. பாகிஸ்தான், ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான் அணி ஏற்கனவே 3 தொடர் வெற்றிகளுடன் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுவிட்டது. இந்நிலையில், இறுதிப்போட்டிக்குச் செல்லும் இரண்டாவது அணி எது என்பதைத் தீர்மானிக்கும் முக்கியமான போட்டியில் இன்று இலங்கையும் ஜிம்பாப்வேயும் மோதின. திணறிய ஜிம்பாப்வே பேட்டிங் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி, இலங்கை பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. தொடக்க வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். பிரையன் பென்னட் 34 ரன்கள் எடுத்து சற்று நேரம் தாக்குப்பிடித்தாலும், வனிந்து ஹசரங்காவின் பந்துவீச்சில் எதிர்பாராத விதமாக ‘ஹிட் விக்கெட்’ ஆகி வெளியேறினார். கேப்டன் சிக்கந்தர் ராசா 29 பந்துகளில் 37 ரன்கள் எடுத்த நிலையில், ஹசரங்கா பந்துவீச்சிலேயே ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் ரியான் பர்ல் 26 பந்துகளில் 37 ரன்கள் விளாசியதால், ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் என்ற சுமாரான ஸ்கோரையே எட்டியது. இலங்கை தரப்பில் மஹீஷ் தீக்ஷனா மற்றும் வனிந்து ஹசரங்கா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிசாங்கா ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார். ஜிம்பாப்வே பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த அவர், மைதானத்தில் ரன் மழை பொழிந்தார். அவருக்கு மறுமுனையில் இருந்த குசல் மெண்டிஸ் 25* ரன்கள் சேர்த்து, நிதானமாக ஆட, நிசாங்கா தனது அதிரடியைத் தொடர்ந்தார். வெறும் 58 பந்துகளைச் சந்தித்த நிசாங்கா, 11 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 98 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். வெறும் 2 ரன்களில் சதத்தை நழுவவிட்டாலும், அணியின் வெற்றியை அவர் உறுதி செய்தார். முடிவில், இலங்கை அணி 16.4 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 148 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.




















