
கவுகாத்தி, நவ. 27- தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இந்திய அணி இழந்ததை அடுத்து மைதானத்தில் இருந்த ரசிகர்கள் பயிற்சியாளர் கம்பீருக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். கவுகாத்தி மைதானத்தில் போட்டி முடிந்ததும், தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீரைப் பார்த்து போட்டி நடந்த அசாம் மாநில ரசிகர்கள் “கம்பீர் ஹாய் ஹாய்” (கம்பீர் ஒழிக) என்று ஆக்ரோஷமாகக் கோஷமிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தென்னாப்பிரிக்காவிடம் 408 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து, சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் தோல்வி என்ற வரலாற்று அவமானத்தை இந்திய ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை. அதன் வெளிப்பாடுதான் இந்த கோஷங்கள். கவுகாத்தி பர்சபரா மைதானத்தில் போட்டி முடிவடைந்த பிறகு, இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மைதானத்தில் நின்றுகொண்டிருந்தார். அப்போது தோல்வியின் விரக்தியில் இருந்த ரசிகர்கள், அவரை நோக்கி “கவுதம் கம்பீர் ஹாய் ஹாய்.. கவுதம் கம்பீர் ஹாய் ஹாய்..” என்று முழக்கமிட்டனர். தங்கள் சொந்த மண்ணில், தங்கள் கண்முன்னே இந்திய அணி இப்படிச் சரணடைந்ததை ஏற்க முடியாத ரசிகர்கள், மொத்த பழியையும் கம்பீர் மீது சுமத்திக் கூச்சலிட்டனர். இதைக் கேட்டு கம்பீர் எதுவும் பேச முடியாமல், இறுக்கமான முகத்துடன் மைதானத்தில் நின்ற காட்சிகள் வீடியோவாக வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கவுதம் கம்பீர் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பிறகு, இந்திய அணி சொந்த மண்ணில் சந்திக்கும் இரண்டாவது ‘ஒயிட்வாஷ்’ இதுவாகும். ஏற்கனவே நியூசிலாந்துக்கு எதிராக 0-3 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது. தற்போது தென்னாப்பிரிக்காவிடம் 0-2 என்ற கணக்கில் மண்ணைக் கவ்வியுள்ளது. சொந்த மண்ணில் விளையாடிய கடைசி 7 டெஸ்ட் போட்டிகளில் ஐந்தில் இந்தியா தோல்வியையே தழுவியுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப்போட்டிக்குச் செல்லும் வாய்ப்பும் இதனால் மங்கிப்போனது. இவையெல்லாம் சேர்ந்துதான் ரசிகர்களின் கோபமாக வெடித்துள்ளது. கவுகாத்தி டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா ஆதிக்கம் செலுத்தியது. செனுரன் முத்துசாமி (109 ரன்கள்) மற்றும் மார்கோ யான்சன் (93 ரன்கள்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 489 ரன்கள் குவித்தது. பந்துவீச்சில் யான்சன் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவை 201 ரன்களில் சுருட்டினார்.




















