
திருப்பதி: நவம்பர் 27-
திருப்பதி ஏழுமலையானை வைகுண்ட துவாரம் வழியாக தரிசனம் செய்வதற்கான முன்பதிவு இன்று காலை 10 மணிக்கு தேவஸ்தானம் வெளியிட்டது. லக்கி டிப் முறையில் முதல் 3 நாட்களுக்கான முன்பதிவு டோக்கன்களை பக்தர்கள் பெறலாம். உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினசரி ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்கிறார்கள். அது போல் விசேஷ நாட்களில் இந்த எண்ணிக்கை லட்சத்தை தாண்டும். திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் புரட்டாசி மாதத்திலும் வைகுண்ட ஏகாதசியிலும்தான் கூட்டம் அதிகமாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் பெருமாள் கோயில்களில் இராப்பத்து, பகல் பத்து என வைகுண்ட ஏகாதசி விமரிசையாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி டிசம்பர் 30ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் வைகுண்ட வாசல் வழியாக பெருமாளை தரிசிக்கலாம். ஸ்ரீரங்கம், திருப்பதி, காஞ்சிபுரம் வரதராஜர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், முகப்பேர் சந்தான சீனிவாச கோயில் உள்ளிட்ட கோயில்களில் வைகுண்ட துவாரம் என தனியே ஒரு வழி இருக்கும். இந்த வழி ஆண்டு முழுவதும் மூடப்பட்டிருக்கும். வைகுண்ட ஏகாதசி அன்று மட்டும் திறக்கப்படும். அன்று முதல் 10 நாட்களுக்கு இந்த வழி வழியாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வர். அந்த வழியில்தான் உற்சவர் உலா வந்திருப்பார். வைகுண்ட ஏகாதசியில் பெருமாளை தரிசிப்பது புண்ணியம். அந்த வகையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் 30, 31, ஜனவரி 1 ஆகிய மூன்று தேதிகளில் லக்கி டிப் முறையில் மட்டுமே ஆன்லைனில் தரிசன டிக்கெட் புக் செய்ய முடியும். மற்ற நாட்களில் ஆன்லைன் தரிசனங்கள், சேவைகள் ஆகியன ரத்து செய்யப்படுகிறது.


















