புயல்! சென்னையில் 54 விமானங்கள் ரத்து

சென்னை: நவம்பர் 29-
டிட்வா புயல் எதிரொலியால் சென்னையில் 54 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் சென்னை, மதுரை, பெங்களூர் உள்ளிட்ட பல நகரங்களுக்குச் செல்லும் விமானங்கள் பாதிக்கப்பட்டன.
தமிழ்நாடு, புதுச்சேரி கடலோர பகுதிகளிலும் இலங்கையிலும் டிட்வா புயல் தீவிரமடைந்துள்ளது. இன்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அது போல் 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 4 மாவட்டங்களில் 4 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அது போல் கல்லூரிகளில் நடைபெறவிருந்த தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் சென்னை விமான நிலையத்திலும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சென்னை விமான நிலைய அதிகாரிகள் டிட்வா புயல், கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து இன்று மொத்தம் 54 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கும் பல உள்நாட்டு மற்றும் பிராந்திய நகரங்களுக்கும் இடையிலான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மதுரை, திருச்சி, தூத்துக்குடி, சேலம், பெங்களூர், ஹைதராபாத், இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று காலை முதல் இரவு வரை திட்டமிட்டிருந்த இந்த விமானங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தரை இறக்கப்பட்டுள்ளன.
தற்போது 54 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் வானிலை மோசமடைந்தால் கூடுதலாக விமானங்கள் ரத்து செய்ய வாய்ப்புள்ளது. எனவே பயணிகள் தங்கள் விமானங்களின் ஸ்டேட்டஸ்ஸை உறுதிப்படுத்திக் கொண்டு விமான நிலையங்களுக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.