சென்னை: டிசம்பர் 2 –
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இரண்டாவது நாளாக கனமழை விடாமல் பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
சென்னை அருகே நீடிக்கும் தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சென்னைக்கு கிழக்கே நேற்று மாலை வரை நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (டிச.2) சென்னைக்கு மிக அருகில் வந்து தீவிர தாழ்வு பகுதியாகவும், பிறகு தாழ்வு பகுதியாகவும் செயலிழக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று அதிகாலையில் தொடங்கிய மழை நாள் முழுவதும் கொட்டித் தீர்த்தது. இரவிலும் தொடர்ந்த கனமழை, இன்றும் இரண்டாவது நாளாக விடாமல் பெய்து வருகிறது. சென்னை அண்ணா சாலை, கிண்டி, சைதாப்பேட்டை, வடபழனி உள்ளிட்ட பகுதிகளிலும், தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் சாலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். மெட்ரோ ரயில் பணி, மழைநீா் வடிகால் பணி உள்ளிட்ட பணிகளால் பெரும்பாலான சாலைகள் சேரும் சகதியுமாக காட்சியளிக்கின்றன. சென்னையில் உள்ள சில சுரங்கப் பாதைகளில் தண்ணீரை மாநகராட்சி ஊழியர்கள் உடனுக்குடன் வெளியேற்றி வருகின்றனர்.
தொடர் கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியதையடுத்து பொதுமக்கள் பலரும் தங்களுடைய கார்களை வேளச்சேரி, ராயபுரம் மற்றும் கோடம்பாக்கம் மேம்பாலங்களில் நிறுத்தி வைத்துள்ளனர்.














