
டெல்லி, டிச. 2- இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள கமிஷன் பரிந்துரை அடிப்படையில் தான் சம்பளம் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பளம் உயர்த்தி வழங்கப்படுகிறது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் சம்பளம் மற்றும் ஓய்வூதிய தொகையை உயர்த்தி வழங்குவது தொடர்பாக 8ஆவது சம்பள கமிஷன் நியமனம் செய்யப்பட்டுள்ளது. சம்பள கமிஷன் தன்னுடைய பரிந்துரைகளை வழங்கி அந்த பரிந்துரைகளை அரசு ஏற்று புதிய சம்பளம் நடைமுறைக்கு வந்து மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் உயர்வு கிடைக்க கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் தேவைப்படும் என சொல்லப்படுகிறது . இந்த சூழலில் தான் அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளமும் அவர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியும் இணைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்த கோரிக்கைக்கு தான் மத்திய அரசு தற்போது பதில் அளித்திருக்கிறது. ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள கமிஷன் பரிந்துரை அடிப்படையில் சம்பளம் உயர்த்தி வழங்கப்படுகிறது . இதனை அடுத்து 10 ஆண்டு காலத்திற்கும் ஆண்டுக்கு இரண்டு முறை பண வீக்கத்தின் அடிப்படையில் சம்பளத்தில் குறிப்பிட்ட சதவீதம் என்பது அகவிலை படியாக வழங்கப்படுகிறது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு அவர்களின் அடிப்படை சம்பளத்தில் 58 சதவீத தொகை அகவிலை படியாக கிடைக்கிறது. அதாவது 1 லட்சம் ரூபாய் அடிப்படை சம்பளம் என்றால் அதில் 58 சதவீதம் அதாவது 58,000 ரூபாய் அகவிலைப்படியாக கிடைக்கும். இதோடு வீட்டுவாடகை அலோவென்ஸ் என்பன உள்ளிட்டவை சேர்த்து சுமார் 1.8 லட்சம் ரூபாய் வரை சம்பளமாக வழங்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதமே 50 சதவீதம் அகவிலைப்படி என்ற நிலையை அடைந்து விட்டது. இந்த நிலையில் தான் பல்வேறு தொழிலாளர் யூனியன்களும் அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்தோடு இணைக்க வேண்டும் என தொடர்ச்சியாக கோரிக்கை முன்வைத்து வருகின்றனர்.

















