சென்னை: டிசம்பர் 3-
கொச்சியில் இருந்து நேற்று முன்தினம் டெல்லி சென்ற முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாஜகவின் முக்கிய பொறுப்பாளர்கள் சிலரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி, அதிமுக உரிமை மீட்புக்குழுவைத் தொடங்கி நிர்வாகிகளை நியமித்து வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாஜக தரப்பு ஒத்துழைக்காததாலும், பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்த போது சந்திக்க இயலாத காரணத்தாலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக கடந்த ஜூலை மாதம் அறிவித்து வெளியேறினார்.
தொடர்ந்து, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து டிடிவி தினகரனும் விலகினார். இந்நிலையி்ல், அதிமுகவை ஒன்றிணைக்க வலியுறுத்திய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் கட்சியில் இருந்து பொதுச்செயலாளர் பழனிசாமியால் நீக்கப்பட்டார்.
தொடர்ந்து, ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா, செங்கோட்டையன் ஆகியோர் இணைந்து செயல்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், செங்கோட்டையன் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்து விட்டார். இதற்கிடையில் யாரையும் அதிமுகவில் இணைக்க மாட்டோம் என்று பழனிசாமி கூறிவிட்டதால், இணைப்பு முயற்சிகளுக்கு வலுவில்லாமல் போனது.
இறுதியாக, சமீபத்தில் நிர்வாகிகளுடன் பேசிய ஓபிஎஸ், டிசம்பர் 15-ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்தப்போவதாகவும், அதற்குள் ஒருங்கிணைக்க வேண்டும், இல்லாவிட்டால், எங்கள் முடிவை மக்கள் ஏற்கும் நிலைக்கு எங்களை தள்ளிவிடாதீர்கள் என்று கூறியிருந்தார்.இந்நிலையில், அவர் தனது அதிமுக உரிமை மீட்புக்குழுவை மாற்றிவிட்டு அதிமுக உரிமை மீட்புக் கழகமாக பதிவு செய்து கட்சியாக நடத்தப்போவதாக தகவல் வெளியானது. இந்த சூழலில், நேற்று முன்தினம் கேரள மாநிலம் கொச்சிக்கு சிகிச்சைக்காக சென்ற ஓபிஎஸ், அங்கிருந்து டெல்லி சென்றுள்ளார். டெல்லியில் முகாமிட்டுள்ள அவர், பாஜக தலைவர்கள் மற்றும் தமிழக பொறுப்பாளர்கள் சிலரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. அதே நேரம், ஆடிட்டர் குருமூர்த்தியும் டெல்லி சென்றுள்ளதாகவும், அவர் மூலம் ஓபிஎஸ் பாஜக தலைவர்களை சந்திக்கலாம், பாஜக கூட்டணிக்குள் ஓபிஎஸ் மீண்டும் வருவதற்கு வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு வேளை அதிமுக ஒன்றிணைப்பு நடைபெறாத பட்சத்தில், தனது புதிய கட்சியை ஓபிஎஸ் பதிவு செய்ய தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

















