​தி​முக​விடம் 40 தொகு​தி​கள் கேட்க காங்​கிரஸ் முடிவு

​சென்னை: டிசம்பர் 3-
திமுக​விடம் 40 தொகுதி​களில் இருந்து பேச்சு​வார்த்தை தொடங்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் தலைமை அமைத்​துள்ள 5 பேர் கொண்ட குழுவினர் இன்று திமுகவுடன் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்குகின்​றனர்.
தமிழகத்தில் சட்டப்​பேரவை தேர்தல் இன்னும் சில மாதங்​களில் நடக்க உள்ளது. தேர்தலை சந்திக்க கட்சிகள் தயாராகி வருகின்றன. திமுக கூட்ட​ணியில் உள்ள காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள், எத்தனை தொகுதிகள் கேட்பது, என்னென்ன தொகுதிகள் கேட்பது என்பது குறித்து அவர்களுக்குள் ஆலோசனை நடத்தி வருகின்​றனர். குறிப்பாக, கடந்த முறையைவிட இந்த முறை அதிக தொகுதிகளை கேட்டு பெறுவதற்கு கூட்டணி கட்சிகள் முடிவு செய்துள்ளன.
இதற்கிடை​யில், தொகுதி பங்கீடு குறித்து திமுக​வுடன் பேச்சு​வார்த்தை நடந்த காங்கிரஸ் தலைமை 5 பேர் கொண்ட குழுவை அமைத்​துள்ளது.
இந்த குழுவில் காங்கிரஸ் தமிழக பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்​பெருந்தை மற்றும் அகில இந்திய காங்கிரஸ் செயலா​ளர்கள் எம்.என். ஹெக்டே, நிவேதித் ஆல்வா மற்றும் சட்டப்​பேரவை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் ஆகியோர் இடம் பெற்றுள்​ளனர். இந்த குழுவினர் இன்று முதல்வர் மு.க.ஸ்​டாலினை சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்பாக, நேற்று தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள், மூத்த தலைவர்​களுடன் குழுவினர் ஆலோசனை நடத்தினர். அப்போது, கடந்த முறையைவிட எத்தனை தொகுதிகள் கூடுதலாக கேட்பது, வெற்றி வாய்ப்​புள்ள தொகுதிகள் என்னென்ன போன்றவைகள் குறித்து விவாதிக்​கப்​பட்டது. கடந்த 2021 சட்டப்​பேரவை தேர்தலில் திமுக கூட்ட​ணியில் 25 தொகுதிகளை பெற்று, அதில் 18 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த முறை திமுக​விடம் 40 தொகுதிகளை கேட்டு காங்​கிரஸ் பேச்​சு​வார்த்தையை தொடங்​க​வுள்​ளதாக கூறப்​படு​கிறது.