
புதுடெல்லி: டிசம்பர் 3-
நம் நாட்டில் அரசுக்கு சொந்தமான பொதுத்துறை வங்கிகளும், தனியார் வங்கிகளும் மக்களுக்கு வங்கி சார்ந்த சேவைகளை வழங்கி வருகின்றன. நம்முடைய பணத்தை டெபாசிட் செய்து சேமித்து வைப்பது, சம்பளத்தை பெறுவது, வாகன கடன், நகை கடன் ,வீட்டு கடன் உள்ளிட்ட கடன்களை வழங்குவது என இந்தியாவில் வங்கி சேவைகள் இன்றியமையாதவையாக மாறிவிட்டன. இந்தியாவில் தற்போது 12 பொதுத்துறை வங்கிகள் செயல்பட்டு வருகின்றன . இந்த 12 பொதுத்துறை வங்கிகளையும் அரசு வெறும் 4 வங்கிகளாக குறைக்க திட்டமிட்டு இருக்கிறதாம். இது தொடர்பாக மணி கண்ட்ரோல்
தளத்தில் பிரத்தியேகமான செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. இதன்படி வரும் 2026 – 2027 ஆம் நிதியாண்டுக்குள் மத்திய அரசு 12 பொதுத்துறை வங்கிகளை 4 பொதுத்துறை வங்கிகளாக குறைக்க திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது மத்திய அரசின் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் 2027 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆப் பரோடா மற்றும் ஒரு பெரிய இணைக்கப்பட்ட வங்கி என நான்கு பொதுத்துறை வங்கிகள் மட்டுமே செயல்பாட்டில் இருக்கும். அண்மைக்காலமாக இந்திய வங்கிகளை உலக அளவில் போட்டி போடக்கூடிய பெரிய வங்கிகளாக உருவாக்க வேண்டும் என தொடர்ந்து கருத்துக்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் தான் மத்திய அரசு பொது துறை வங்கிகளை இணைக்கும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது, முதலில் சிறிய அளவிலான வங்கிகளை இணைத்து பின்னர் அவற்றை பெரிய வங்கிகளோடு இணைக்கும் நடவடிக்கை எடுக்க அரசு முடிவு செய்துள்ளது. முதலில் கனரா வங்கி மற்றும் யூனியன் பாங்க் ஆப் இந்தியாவை ஒன்றிணைக்க முடிவு செய்து இருக்கின்றனர் என அந்த செய்தி குறிப்பிட்டது.















