
சென்னை: டிசம்பர் 5-
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் உள்ளிட்டோரும் ஜெயலலிதா நினைவிடத்தில் இன்று அஞ்சலி செலுத்த உள்ளனர்.
திரைத்துறையில் வாழ்க்கை பயணத்தை தொடங்கிய ஜெயலலிதா, 1982 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். முன்னிலையில் அ.தி.மு.கவில் இணைந்தார். அப்போது அவருக்கு கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. 1987 ஆம் ஆண்டு முதலமைச்சர் பதவியில் இருந்தபோதே எம்.ஜி.ஆர் மறைந்தார்.
எம்.ஜி.ஆருக்கு பிறகு அ.தி.மு.க ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று இரண்டாக உடைந்தது. முதலமைச்சர் பொறுப்பை எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி ஏற்றார். 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அணி சேவல் சின்னத்தில் போட்டியிட்டு 27 இடங்களில் வெற்றி பெற்றது. ஜானகி தலைமையிலான அணி ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. இதையடுத்து, ஜானகி ராமச்சந்திரன் அரசியல் களத்தில் இருந்து விலகினார். அதன்பிறகு, ஒன்றிணைந்த அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக ஜெயலலிதா பொறுப்பேற்றார். 1991, 2001, 2011, 2016 என 4 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சர் பொறுப்பை வகித்தார். தொட்டில் குழந்தை திட்டம், காவல் பணியில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு, அம்மா உணவகம், மாணவர்களுக்கு இலவச லேப்டாப், தாலிக்கு தங்கம், ஏழைகளுக்கு விலையில்லா ஆடு-மாடுகள் என பல்வேறு திட்டங்களை கொண்டுவந்தவர் ஜெயலலிதா.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி அஞ்சலி செலுத்தி உள்ளார். எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் என ஆயிரக்கணக்கான அதிமுகவினரும் கலந்து கொண்டு ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர். அதைத்தொடர்ந்து எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது நினைவிட நுழைவாயிலின் உள் பகுதியில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலாவும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோரும் இன்று மரியாதை செலுத்துகின்றனர். இதையொட்டி நினைவிடம் மற்றும் மெரினா கடற்கரை பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

















