
அகமதாபாத், டிச. 5- தமிழக வீரர் சாய் கிஷோர் சையத் முஷ்டாக் அலி தொடரில் யாரும் எதிர்பாராத வகையில் பேட்டிங்கில் அதிரடி ஆட்டத்தை ஆடியுள்ளார். 2026 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி அவரை தக்க வைத்து இருக்கிறது. இந்த நிலையில், தனது ஆல் ரவுண்டர் திறமையை நிரூபித்துள்ளார் இடதுகை சுழற்பந்து வீச்சாளரான சாய் கிஷோர். Next அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான எலைட் குரூப் டி ஆட்டத்தில் தமிழ்நாடு மற்றும் திரிபுரா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி ஆரம்பமே அதிர்ச்சி வைத்தியம் பெற்றது.
வெறும் 26 ரன்கள் எடுப்பதற்குள் 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து படுமோசமான நிலையில் தத்தளித்தது. அப்போது 6-வது வீரராகக் களமிறங்கினார் சாய் கிஷோர். கேப்டன் நாராயண் ஜெகதீசனுடன் ஜோடி சேர்ந்த அவர், ஆட்டத்தின் போக்கையே தலைகீழாக மாற்றினார்.
இருவரும் திரிபுரா பந்துவீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்தனர். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 119 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. ஜெகதீசன் 49 பந்துகளில் 83 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். சாய் கிஷோர் ருத்ர தாண்டவம் ஆனால், சாய் கிஷோர் நின்றபாடில்லை.
வழக்கமாக பந்துவீச்சில் கலக்கும் அவர், இன்று பேட்டிங்கில் விஸ்வரூபம் எடுத்தார். வெறும் 39 பந்துகளைச் சந்தித்த அவர், ஆட்டமிழக்காமல் 87 ரன்களைக் குவித்தார்.
இதில் 3 பவுண்டரிகள் மற்றும் 8 இமாலய சிக்ஸர்கள் அடங்கும்.
குறிப்பாக கடைசி ஓவரில், இந்திரஜித் தேப்நாத் வீசிய பந்துவீச்சில் தொடர்ந்து ஹாட்ரிக் சிக்ஸர்கள் விளாசி இன்னிங்ஸை முடித்து வைத்தார். இதற்கு முன்பு டி20 கிரிக்கெட்டில் சாய் கிஷோரின் அதிகபட்ச ஸ்கோர் வெறும் 21 ரன்கள் தான்.
ஆனால் இன்று 87 ரன்கள் விளாசி தான் ஒரு முழுமையான ஆல்-ரவுண்டர் என்பதை நிரூபித்துள்ளார். இவரது அதிரடியால் தமிழக அணி 20 ஓவர்களில் 204 ரன்கள் குவித்தது. திரிபுரா அணி 18.5 ஓவர்களில் 143 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. தமிழ்நாடு அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.



















