திருப்பதியில் வைகுண்ட துவார தரிசனம்! ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு

திருப்பதி: டிசம்பர் 5-
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட துவார தரிசனம் செய்வதற்கான ரூ 300 சிறப்பு டிக்கெட் இன்று பிற்பகல் 3 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிடுகிறது. அது போல் ஸ்ரீவாணி விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகள் காலை 10 மணிக்கு வெளியிடப்படும். வைணவ கோயில்களில் விசேஷமாக கொண்டாடப்படும் வைகுண்ட ஏகாதசி, இந்த ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி நடைபெறுகிறது. இது 10 நாட்கள் நடைபெறும் விழாவாகும். எனவே டிசம்பர் 30ஆம் தேதி தொடங்கி ஜனவரி 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது.திருப்பதியில் ஏழுமலையானை இந்த 10 நாட்கள் வைகுண்ட துவாரம் வழியாக தரிசனம் செய்யலாம். இதற்காக டிக்கெட்டுகளை கடந்த 27ஆம் தேதி வெளியிட்டது. அதாவது சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் முதல் 3 நாட்களான டிசம்பர் 30, 31, ஜனவரி 1 ஆகிய 3 நாட்கள் லக்கி டிப் முறையில் மட்டுமே ஆன்லைனில் இலவச தரிசன டிக்கெட் புக்கிங் நடந்தது. அது போல் ஜனவரி 2 ஆம் தேதி முதல் ஜனவரி 8ஆம் தேதி வரை ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட்கள் மூலம் பக்தர்கள் வைகுண்ட துவாரம் வழியாக சென்று ஏழுமலையானை தரிசனம் செய்யலாம். லக்கி டிப் முறையில் புக் செய்தவர்களில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரங்கள் கடந்த டிச.2 ஆம் தேதி வெளியானது.
அதில் கிடைக்க பெறாதவர்கள், ரூ 300 தரிசன சிறப்பு டிக்கெட்டை புக் செய்து கொள்ளலாம். இந்த டிக்கெட் புக்கிங் எப்போது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று பிற்பக் 3 மணிக்கு டிக்கெட்டுகளை தேவஸ்தானம் ரிலீஸ் செய்கிறது. ஒரு நாளைக்கு 15 ஆயிரம் டிக்கெட்டுகள் வெளியிடப்படும்.இந்த ரூ 300 டிக்கெட்டை பெறுவோர் ஜனவரி 2 முதல் 8 ஆம் தேதி வரையில் ஏதாவது ஒரு நாளல் புக் செய்து கொள்ளலாம். அது போல் ஸ்ரீவாணி விஐபி பிரேக் தரிசன டிக்கெட் புக்கிங் இன்று காலை 10 மணிக்கு வெளியாகும். ஒரு நாளைக்கு 1000 டிக்கெட்டுகள் மட்டுமே வெளியிடப்படும். திருப்பதி தேவஸ்தானத்தின் https://ttdevasthanams.ap.gov.in என்ற இணையதள முகவரியில் லாகின் செய்து அதிகபட்சம் ஒரு ஐடியில் 5 டிக்கெட்டுகள் வரை புக் செய்து கொள்ளலாம். இதற்கு ஒவ்வொருவரின் பெயர், பாலினம், வயது, ஆதார் அல்லது பாஸ்போர்ட் எண் ஆகியவற்றுடன் ரெடியாக காத்திருங்கள். புக்கிங் ஓபனானதும் விரைவாக கொடுத்து புக் செய்து கொள்ளுங்கள். 12 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் தேவையில்லை, அவர்களுக்கு இலவச தரிசனம்!