பெங்களூரு, டிசம்பர் 5- பெங்களூரில் இன்று (டிச.5) முதல் 14ஆம் தேதி வரை 10 நாள்களுக்கு 4 ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தகத் திருவிழா நடக்க விருக்கிறது. இதனை இஸ்ரோ தலைவர் டாக்டர் வி. நாராயணன் தொடங்கி வைக்க உள்ளார். பெங்களூரில் கர்நாடகத்தமிழ்ப் பத்திரிகையாளர்
சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் 4ஆம் தமிழ்ப் புத்தகத் திருவிழா டிச.5 முதல் 14ஆம் தேதி வரை பெங்களூரு, வசந்த்நகரில் டாக்டர். பி. ஆர். அம்பேத்கர் வீதியில், விதானசௌதா அருகில் இந்தியன் எக்ஸ்பிரஸ் அலுவகம் எதிரில் உள்ள தி இன்ஸ்டிடுயூட் ஆஃப் எஞ்சினியர்ஸ் வளாகத்தில் நடக்கவிருக்கிறது.
நிகழ்ச்சிகள் அனைத்தும் முத்துசெல்வன் திடல், புலவர் கி.சு.இளங்கோவன் அரங்கம், பேரா.முனை. கு.வணங்காமுடி மேடையில் நடக்கவிருக்கிறது. இந்த திருவிழாவில் மொத்தம் 35 அரங்குகள் அமைக்கப்பபட்டுள்ளன. தமிழ்ப் புத்தகங்களுக்காக நடத்தப்படும்
இந்த விழாவில் கன்னட, ஆங்கில நூல்களும் விற்பனைக்கு கிடைக்கும். கன்னட நூல்களுக்காக 3 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இன்று மாலை 3.30 மணிக்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரி டாக்டர் வ. இராம்பிரசாத் மனோகர் தலைமையில் நடக்கும் தொடக்கவிழாவில் இஸ்ரோ தலைவர் டாக்டர் வி. நாராயணன் தமிழ்ப் புத்தகத் திருவிழாவை தொடக்கி வைக்க இருக்கிறார். தினகரன் நாளிதழ் மேலாண் இயக்குநர் திரு. ஆர். எம். ஆர். இரமேஷ், தொழிலதிபர் திரு. வீ. க. செல்வக்குமார், தமிழறிஞர் திரு. சு. குமணராசன், கல்வியாளர் முனைவர் சேதுகுமணன், திருவனந்தபுரம் தமிழ்ச்சங்க பொதுச்செயலாளர் திரு. வீராணம் முருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர்.
இதைத் தொடர்ந்து, அடுத்த 9 நாட்களில், டாக்டர் வ. இராம்பிரசாத் மனோகர் எழுதிய ‘கருவில் இருந்து கலெக்டர் வரை’ நூல் அறிமுகவிழா, தமிழ் நூல் போட்டி பரிசளிப்பு, கருநாடகத் தமிழர் முகவரி கையேடு வெளியீட்டுவிழா, பொதுமக்களுக்கான தமிழ் மொழித்திறன் போட்டிகள், பாவரங்கம், வில்லுப்பாட்டு, பட்டிமன்றம், கூத்து, சிலம்பாட்டம், நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலை, கலாசார, தமிழ் மாணாக்கர்களை மேம்படுத்தும், ஊக்குவிக்கும் போட்டிகள் உள்ளிட்ட நிகழ்வுகள் நடக்கவிருக்கின்றன.
இதில் அமைச்சர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், முக்கிய பிரமுகர்கள், தமிழ் ஆர்வலர்கள், ஆசிரியர்கள், மாணாக்கர்கள், பொதுமக்கள், கலந்து கொள்கின்றனர்.
Home மாவட்டங்கள் பெங்களூர் பெங்களூரில் இன்று முதல் 10 நாட்கள் புத்தகத் திருவிழா இஸ்ரோ தலைவர் துவக்கி வைக்கிறார்















