பாகிஸ்தான் முப்படைகளின் தலைவராக அசிம் முனீர் நியமனம்

இஸ்லாமாபாத்: டிசம்பர் 6-
பாகிஸ்தானில் ராணுவம், விமானம், கடற்படைகளை இணைத்து முப்படைகளின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் அசிம் முனீர். ராணுவம், கடற்படை, விமானப்படையை கட்டுப்படுத்தும் அதிகாரம் ஃபீல்டு மார்ஷல் அசீம் முனீருக்கு வழங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி, நாட்டின் முதல் பாதுகாப்புப் படைத் தலைவராக (CDF) அசிம் முனீரை அடுத்த ஐந்து ஆண்டு காலத்திற்கு நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளார்.
பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் உள்ளார். இந்த நிலையில், பாகிஸ்தானின் ராணுவத் தளபதி அசிம் முனீரின் பதவி நீட்டிப்புக்கு ஏற்றவாறு அரசியல் சாசனத்தின் 243வது பிரிவில் 27வது திருத்தத்தை மேற்கொள்ளும் மசோதா அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதாவது, பாகிஸ்தானில் ராணுவம், கடற்படை, விமானப்படை என முப்படைகளின் தலைவர் என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஆபரேஷன் சிந்தூர் காரணமாக இந்தியாவிடம் பாகிஸ்தான் கடும் பின்னடைவைச் சந்தித்த நிலையில் அனைத்துப் படைகளையும் வழிநடத்த வலுவான தளபதி தேவை என்ற நோக்கின் அடிப்படையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த சக்திவாய்ந்த பொறுப்பு, ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை என மூன்றையும் கட்டுப்படுத்த வழிவகுக்கிறது. பிரதமரின் ஆலோசனைக்குப் பிறகு குடியரசுத் தலைவர் முனீரை அதிகாரப்பூர்வமாக நியமிப்பார் என கடந்த சில நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில், பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி, நாட்டின் முதல் பாதுகாப்புப் படைத் தலைவராக (CDF) அசிம் முனீரை அடுத்த ஐந்து ஆண்டு காலத்திற்கு நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளார். இது தொடர்பாக அதிபர் அலுவலகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், 5 ஆண்டு காலத்திற்கு பாதுகாப்புப் படைகளின் தலைவராக ராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் அசிம் முனீரை நியமனம் செய்ய, பிரதமர் சமர்ப்பித்த பரிந்துரையை அதிபர் ஆசிப் அலி சர்தாரி அங்கீகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுவரை முப்படைகளுக்கான அதிகாரம், அதிபர் மற்றும் அமைச்சரவை கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், இனி அந்த அதிகாரம் அசிம் முனீர் கைக்கு வந்துள்ளது. பாகிஸ்தானின் அரசியலமைப்பு திருத்தங்களால் விளைவுகள் ஏற்படும் என ஐ.நாவும் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானின் அவசர அரசியலமைப்புத் திருத்தங்கள் நீதித்துறை சுதந்திரத்தை கடுமையாகப் பாதிக்கின்றன. இந்த மாற்றங்களால் நீதித்துறையை அரசியல் தலையீடு மற்றும் நிர்வாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் அபாயம் உள்ளது என்று ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் வோல்கர் டர்க் தெரிவித்திருந்தார். முனீரின் மூன்று ஆண்டு இராணுவத் தளபதி பதவிக்காலம் கடந்த நவம்பர் 29 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. பாகிஸ்தானின் திருத்தப்பட்ட அரசியலமைப்பின்கீழ், ராணுவத் தலைவரின் பதவிக்காலம் சி.டி.எஃப் உடன் இணைந்ததாக மாறி ஐந்து ஆண்டுகள் நீடிக்கும். 2004ஆம் ஆண்டு இராணுவச் சட்டத் திருத்தத்தின்கீழ், இராணுவத் தலைவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் வரை செல்லுபடியாகும்.