
புதுடெல்லி: டிசம்பர் 9-
இண்டிகோ நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு கூறியுள்ளார்.
இண்டிகோ விமான சேவை 7-வது நாளாக நேற்றும் பாதிக்கப் பட்டது. நாடு முழுவதும் நூற்றுக் கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இதுகுறித்து மாநிலங்களவையில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறியதாவது:
விமானிகள் பணிநேரம் குறித்த புதிய விதிகள் அமலுக்கு வந்தததால், இண்டிகோ நிறுவனம் பைலட் பற்றாக்குறை பிரச்சினையை சந்தித்தது. இதனால் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஆயிரக்கணக்கான பயணிகள் தவித்தனர்.
இந்த விவகாரத்தை நாங்கள் எளிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நாங்கள் கடும் நடவடிக்கை எடுத்து மற்ற விமான நிறுவனங்களுக்கு முன்மாதிரியை ஏற்படுத்துவோம். புதிய விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம்.
இந்த விவகாரம் குறித்து முழு விசாரணை நடத்தப்படும். விமான போக்குவரத்து துறையில் அதிக நிறுவனங்கள் செயல்பட வேண்டும் என அரசு விரும்புகிறது. 5 பெரிய விமான நிறுவனங்களை வைத்துக் கொள்ளும் அளவுக்கு நாட்டின் திறன் உள்ளது. இவ்வாறு ராம்மோகன் நாயுடு கூறினார்.


















