“தாயின் சாதி அடிப்படையில் ஏன் சாதி சான்றிதழை தரக்கூடாது

டெல்லி, டிச. 10- இந்தியாவில் பொதுவாகத் தந்தையின் சாதியைப் பொறுத்தே குழந்தைகளுக்குச் சாதிச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதற்கிடையே ஒரு சிறுமியின் கல்வி எதிர்காலத்தைப் பாதுகாக்கும் விதமாக, தாயின் சாதியின் அடிப்படையில் பட்டியல் சாதி (எஸ்.சி) சான்றிதழ் வழங்க உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதி அளித்துள்ளது.
நமது நாட்டில் சாதி அடிப்படையில் பல நூறு ஆண்டுகளாக ஏற்றத்தாழ்வு இருந்து வருகிறது. அதைக் கருத்தில் கொண்டே இங்குச் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மேலும், நமது நாட்டில் பொதுவாகத் தந்தையின் சாதியைப் பொறுத்தே குழந்தைகளுக்குச் சாதிச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இருப்பினும், இந்த விதிக்கு எதிராகப் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தாய் சாதி அடிப்படையில் சான்றிதழ் இதற்கிடையே ஒரு சிறுமியின் கல்வி எதிர்காலத்தைப் பாதுகாக்கும் விதமாக தாயின் சாதியின் அடிப்படையில் பட்டியல் சாதிச் சான்றிதழ் வழங்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு ஒரு அசாதாரண நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. புதுச்சேரியைச் சேர்ந்த அந்தச் சிறுமிக்குப் பட்டியல் சாதிச் சான்றிதழ் வழங்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், அந்த உத்தரவில் தலையிட உச்ச நீதிமன்ற அமர்வு மறுத்துவிட்டது. இது தொடர்பான வழக்கைத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பக்ஷி ஆகியோரின் அமர்வு விசாரித்தது. சிறுமியின் கல்வி பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்காகவே இந்தக் குறிப்பிட்ட உத்தரவைப் பிறப்பிப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தர். அதேநேரம் சட்டப்படி எது சரியானது என்பது குறித்து இன்னும் விசாரணை நடக்கவே செய்கிறது என்று அவர் தெரிவித்தார்.