
மும்பை, டிச. 11- 2026-ம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பைத் தொடர் நெருங்கி வரும் வேளையில், அணிகளின் தயார்நிலை குறித்த அட்டவணை வெளியாகியுள்ளது. அதாவது, 2026 டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன் ஒவ்வொரு அணியும் எத்தனை போட்டிகளில் விளையாட உள்ளன என்ற அட்டவணை வெளியாகி உள்ளது. இதில் நடப்பு சாம்பியனான இந்திய அணிக்குத் தான் இருப்பதிலேயே அதிகப்படியான போட்டிகள் உள்ளன. அதேசமயம், ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில முக்கிய அணிகள் உலகக்கோப்பைக்கு முன்பு ஒரு சர்வதேச டி20 போட்டியில் கூட விளையாடாமல் நேரடியாகக் களமிறங்கவுள்ளன.
10-வது ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பைத் தொடர் வரும் பிப்ரவரி 7, 2026 அன்று தொடங்கி மார்ச் 8 வரை நடைபெறவுள்ளது. இந்தியாவும், இலங்கையும் இணைந்து நடத்தும் இந்தத் தொடரில் 20 அணிகள் மோதுகின்றன. உலகக்கோப்பைக்குத் தயாராகும் விதமாக இந்திய அணிக்கு மிகக் கடுமையான அட்டவணை திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. இதைத் தொடர்ந்து, ஜனவரி 2026-ல் நியூசிலாந்து அணி இந்தியா வருகிறது. அவர்களுக்கு எதிராக 5 டி20 போட்டிகளில் இந்தியா விளையாடவுள்ளது. மொத்தமாக உலகக்கோப்பைக்கு முன்பு சுமார் 10 சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியா விளையாடுகிறது.




















