
திருப்பரங்குன்றம்: டிசம்பர் 12-
மலை உச்சி தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி, திருப்பரங்குன்றத்தில் உள்ளூர் மக்கள் நாளை பங்கேற்கும் உண்ணாவிரதத்திற்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதியளித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், திருப்பரங்குன்றம் பிரபு தாக்கல் செய்த மனு:
திருப்பரங்குன்றம் கோவில் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற, உயர் நீதிமன்றக் கிளை டிச., 1ல் உத்தரவிட்டது. இதை கோவில் நிர்வாகம் நிறைவேற்றவில்லை. தீபத்துாணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி, திருப்பரங்குன்றம் மயில் மண்டபம் அருகே உள்ளூர் மக்கள் உண்ணாவிரதம் இருக்க போலீசாரிடம் அனுமதி கேட்டோம்; அனுமதி தரவில்லை.எனவே, டிச., 13ல் உண்ணாவிரதம் நடத்த அனுமதிக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.ஸ்ரீமதி பிறப்பித்த உத்தரவு: உண்ணாவிரதம் நடத்த, நாளை காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை அனுமதிக்கப்படுகிறது;50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். அரசியல் விமர்சனம் கூடாது. கோஷம் எழுப்பக்கூடாது. மந்திரம் மட்டுமே உச்சரிக்க வேண்டும். வீடியோ பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
















