பல தலைமுறைகளை கவர்ந்த ரஜினி – பிரதமர் மோடி வாழ்த்து

சென்னை: டிசம்பர் 12-
நடிகர் ரஜினிகாந்த்துக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் தமிழில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாள் எனும் சிறப்பான தருணத்தில் அவருக்கு வாழ்த்துக்கள். அவரது நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளது; பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது.
அவரது திரையுலகப் படைப்புகள் பல்வேறு பாத்திரங்கள் மற்றும் பாணிகளில் பரவி, தொடர்ச்சியான முத்திரைகளைப் பதித்துள்ளன. திரைப்பட உலகில் அவர் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். அவரது நீண்டகால, ஆரோக்கியமான வாழ்க்கைக்காகப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: ரஜினிகாந்த் வயதை வென்ற வசீகரம்.
மேடையில் ஏறினால் அனைவரையும் மகிழ்விக்கும் சொல்வன்மை. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத கள்ளம் கபடமற்ற நெஞ்சம்.
மென்மேலும் பல வெற்றிப் படைப்புகளை அளித்து, மக்களின் அன்போடும் ஆதரவோடும் தங்கள் வெற்றிக்கொடி தொடர்ந்து பறக்கட்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர், இபிஎஸ்: தமிழ்த் திரையுலகின் அசைக்க முடியாத பேராளுமையாக 50 ஆண்டுகளாக கோலோச்சி வரும் சூப்பர்ஸ்டார் ரஜினி காந்துக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். திரையரங்குகளை திருவிழாக் கூடங்களாக மாற்றவல்ல தங்களின் ஸ்டையில் மெஜிக் ரசிகர்களை மகிழ்விக்கட்டும் பல்லாண்டு.

தமிழக பாஜ முன்னாள் தலைவர், அண்ணாமலை: இன்று 75வது பிறந்த நாள் கொண்டாடும், அன்புக்கும் மரியாதைக்கும் உரிய, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எளிய பின்னணியில் இருந்து வந்து, தனது கடும் உழைப்பாலும், மேன்மையான பண்புகளாலும், ஐம்பது ஆண்டுகளாக, இந்தியத் திரையுலகின் உச்சத்தில் இருப்பவர்.பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை, மூன்று தலைமுறைகளை தனது வசீகரத்தால் ஈர்த்திருப்பவர். சிறந்த தேசியவாதியும், பண்பாளருமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மேலும் பல்லாண்டுகள் நலமுடன், ஆரோக்கியத்துடன் வாழ, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

தமிழக பாஜ தலைவர், நயினார் நாகேந்திரன்: தமிழ் திரையுலகின் மார்க்கண்டேயன்; மூன்று தலைமுறைகளை ஆக்கிரமித்தவர்; திரையுலக வானில் நட்சத்திரமாக மிளிர்பவர்; 50 ஆண்டுகளாக மக்களின் இதயங்களில் ஆதர்ச நாயகனாக கோலோச்சி வரும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு எனது இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். மேலும் பல ஆண்டுகள் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுள் பெற்று திரையுலகில் பல சாதனைகளைப் படைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

நடிகர் கமல்ஹாசன்: 75 வருட வாழ்க்கையில், 50 ஆண்டு கால சினிமா. வாழ்த்துக்கள் நண்பா.