வட மாநிலங்களை வாட்டும் குளிர்; மைனஸ் டிகிரியில் பதிவாகும்

புதுடில்லி: டிசம்பர் 13-
நம் நாட்டின் வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவும் நிலையில், காஷ்மீரில் மைனஸ் டிகிரியில் வெப்பநிலை பதிவாகி வருகிறது. டில்லி, ஹிமாச்சல் உள்ளிட்ட மாநிலங்களிலும் கடும் பனிமூட்டம் ஏற்படுவதுடன், இயல்பைவிட குறைந்த வெப்பநிலை நீடிக்கிறது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: வட மாநிலங்களில் வீசும் குளிர் காற்று மத்திய மஹாராஷ்டிரா, ஒடிஷா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இன்றுவரை நீடிக்கும். இதேபோல் தெலுங்கானா, வடக்கு உள் கர்நாடகாவிலும் நாளை வரை குளிர்காற்று வீசும்.
ஒடிஷாவின் அனுகுல், சுந்தர்கர், கேந்திரபாரா, கலஹண்டி, கோராபுட் ஆகிய பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை, 10 டிகிரி செல்ஷியஸுக்கும் குறைவாக பதிவானது. இதே நிலை, நாளை வரை நீடிக்க வாய்ப்புள்ளதால், அங்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜம்மு – காஷ்மீரில் வெப்பநிலை, உறைபனி நிலைக்கும் கீழே சரிந்தது. குப்வாராவில் மைனஸ் 3.6 டிகிரி செல்ஷியஸ், பஹல்காமில் மைனஸ் 4.6 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது. இதேபோல் ஹிமாச்சலில் கடும் பனிப்பொழிவு மற்றும் குளிர்காற்று வீசுவதால், ரோஹ்தாங் பாதை, குலு மாவட்டத்தின் டார்ச்சா பகுதிக்கு செல்லும் பாதை உள்ளிட்டவை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
உத்தரகண்டில் கடும் குளிர் காற்று வீசும். டில்லியில், குளிர் 8 டிகிரி செல்ஷியஸாக பதிவாகி உள்ளது. அடுத்த மூன்று மாதங்களில், வெப்பநிலை இதைவிட குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.