மதுரை: டிச.18-
‘‘நீதிமன்ற உத்தரவை மீறுவதற்கு சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணமாக காட்டுவதை மன்னிக்க முடியாது. இது சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கும் அரசியலமைப்பு இயந்திரம் முடங்கவும் வழிவகுக்கும்’’ என்று திருப்பரங்குன்றம் அவமதிப்பு வழக்கில் நீதிபதி திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப வழக்கில், நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு நேற்று நடைபெற்றது. மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், மாநகர காவல் ஆணையர் லோகநாதன், துணை காவல் ஆணையர் இனிகோ திவ்யன், திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலர் யக்ஞ நாராயணன் ஆகியோர் நேரில் ஆஜராயினர்.தமிழக அரசு தலைமைச் செயலர் முருகானந்தம், ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் காணொலி வழியாக ஆஜராயினர்.அப்போது நீதிபதி, ‘‘இந்த நீதிமன்றத்தின் உத்தரவுகளை அதிகாரிகள் மீறியுள்ளனர், அவமதித்துள்ளனர். இதற்கு அதிகாரிகள் பதில் சொல்லியாக வேண்டும். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் மதுரை, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் 144 தடை ஆணை பிறப்பித்துள்ளனர். நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் மதிக்காதது ஏன் என விளக்கம் அளிக்க வேண்டும். நான் தேர்தலில் போட்டியிடப் போகிறேனா என்று 2 நீதிபதிகள் அமர்வில் ஆட்சியர், காவல் ஆணையருக்காக ஆஜரான வழக்கறிஞர் ஏன் அப்படி கூறினார்’’ என்று தலைமைச் செயலரிடம் கேள்வி எழுப்பினார்.அதற்கு தலைமைச் செயலர் பதில் அளிக்கையில், ‘‘எந்த உள்நோக்கத்துடனும் 144 தடை ஆணை பிறப்பிக்கப்படவில்லை. ஏற்கெனவே உள்ள உத்தரவுகளின் அடிப்படையில்தான் 144 தடை ஆணை பிறப்பிக்கப்பட்டது. தனி நீதிபதியின் உத்தரவை நிறைவேற்றக் கூடாது என்ற கருத்து இல்லை. அந்த உத்தரவுக்கு எதிராக 2 நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்து அங்கு விசாரணை நடைபெற்று வருகிறது’’ என்றார்.இந்நிலையில், இந்த தீர்மான நோட்டீஸில் கையெழுத்திட்ட திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், நோட்டீஸை ஏற்கக் கூடாது என்று மக்களவை செயலருக்கு உத்தரவிட கோரியும் மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.















