
கொச்சி: டிச.18-
நடுவானில் ஏற்பட்ட பழுது காரணமாக சவுதி அரேபியாவில் இருந்து வந்து கொண்டிருந்த ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ் விமானம் கொச்சி விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறங்கியது. இதனால், 160 பயணிகள் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர்.
சவுதி அரேபியாவின் ஜெட்டா விமான நிலையத்தில் இருந்து கேரளாவின் கோழிக்கோட்டுக்கு 160 பயணிகளுடன் ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்து கொண்டிருந்தது. நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென விமானத்தின் லேண்டிங் கியர் மற்றும் டயரில் பழுது ஏற்பட்டிருப்பதை விமானி கண்டறிந்தார்.இதன் காரணமாக, கொச்சி விமான நிலையத்தில் அவசர அவசரமாக பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதில், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
கொச்சி விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், ‘ பழுது காரணமாக ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறக்குவது குறித்த தகவல் கிடைத்தவுடன்,
அனைத்து அவசர சேவைகளையும் தயார் நிலையில் வைத்தோம். காலை 9.07 மணிக்கு விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. அதன்பிறகு, ஆய்வு செய்த போது, விமானத்தின் வலது பக்கம் உள்ள இரு டயர்களும் வெடித்திருந்தன.’ என்றனர்.















