3 மூட்டை கோதுமையை வித்துட்டு வந்தேன்..” கதறிய ரசிகர்

லக்னோ, டிச. 18- இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான நான்காவது டி20 போட்டி, கடும் பனிமூட்டம் காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.
ஆட்டத்தைக் காண ஆவலோடு வந்த ரசிகர்கள், ஏமாற்றத்தின் உச்சிக்கே சென்று பிசிசிஐக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர். குறிப்பாக, “மூன்று மூட்டை கோதுமையை விற்றுவிட்டு வந்தேன்” என்று ஒரு ரசிகர் கதறிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. லக்னோ ஏகானா மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெறவிருந்த இப்போட்டியில் இந்தியா வென்றிருந்தால், தொடரைக் கைப்பற்றியிருக்கும். ஆனால், அங்கு நிலவிய சூழ்நிலை அதற்கு அனுமதிக்கவில்லை. கதறிய ஏழை ரசிகர் மைதானத்திற்கு வெளியே நின்றிருந்த ரசிகர்கள், போட்டி ரத்தானதை அறிந்து கொந்தளித்தனர். கையில் டிக்கெட்டை வைத்துக்கொண்டு அவர்கள் எழுப்பிய கோஷங்கள் பிசிசிஐ-யை உலுக்கியுள்ளது. ஒரு ரசிகர் வேதனையுடன் கூறுகையில், “நான் 3 மூட்டை கோதுமையை விற்று, அந்தப் பணத்தை வைத்து டிக்கெட் வாங்கி இங்கு வந்தேன். எனக்கு என் பணம் திரும்ப வேண்டும்..” என்று கதறினார். மற்றொரு ரசிகர், “இந்திய அணியின் ஆட்டத்தைப் பார்க்கலாம் என்று ஆசையாக வந்தோம். ஆனால் இதயம் உடைந்துவிட்டது” என்று சோகத்துடன் தெரிவித்தார். மைதானத்தில் நடந்தது என்ன? லக்னோவில் நேற்று மாலை முதலே கடும் குளிர் மற்றும் பனிமூட்டம் நிலவியது. மாலை 6:30 மணிக்கு நடக்க வேண்டிய டாஸ் போடப்படவில்லை. நடுவர்கள் 6:30, 7:00, 7:30, 8:00, 9:00 எனப் பலமுறை மைதானத்தை ஆய்வு செய்தனர். ஆனால் எதிரே இருப்பவரே தெரியாத அளவுக்குப் பனிமூட்டம் அடர்த்தியாக இருந்தது. கூடவே பனிப்பொழிவும் சேர்ந்துகொண்டதால், பிட்ச்சை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. இறுதியில், போட்டி விளையாடுவதற்குச் சாத்தியமில்லை என்று அறிவிக்கப்பட்டு, டாஸ் கூட போடாமலேயே ஆட்டம் கைவிடப்பட்டது.