அம்பயர்களை வறுத்தெடுத்த உத்தப்பா.. கொந்தளித்த ஸ்டெயின்

லக்னோ, டிச. 18- இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான நான்காவது டி20 போட்டி பனிமூட்டம் காரணமாக கைவிடப்பட்ட நிலையில், நடுவர்கள் தொடர்ந்து நேரத்தை வீணடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா பொறுமை இழந்து அவர்களைக் கடுமையாக விமர்சித்தார். “இரவு நேரம் ஆக ஆக பனிமூட்டம் கூடுமே தவிர குறையாது, இதற்கு ஏன் இவ்வளவு ஆய்வு?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைபெறவிருந்த 4-வது டி20 போட்டிக்கு, கடும் பனிமூட்டம் வில்லனாக அமைந்தது. மாலை 6:30 மணிக்கு நடக்க வேண்டிய டாஸ், பனிமூட்டம் காரணமாகப் போடப்படவில்லை. நடுவர்கள் 6:50, 7:30, 8:00 மற்றும் 8:30 எனத் தொடர்ந்து மைதானத்தை ஆய்வு செய்து கொண்டே இருந்தனர். ஆனால், போட்டி தொடங்குவதற்கான அறிகுறியே இல்லை. மைதானத்தில் வர்ணனையாளராக இருந்த ராபின் உத்தப்பா, ஜியோ ஹாட்ஸ்டார் நேரலையில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். “நடுவர்களின் முடிவு எனக்கு மிகுந்த குழப்பத்தை அளிக்கிறது. நேரம் செல்லச் செல்ல இரவு நேரத்தில் பனிமூட்டம் அதிகமாகுமே தவிர, எப்படிச் சரியாகும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்? இன்னும் அரை மணி நேரம் கழித்தால் என்ன நடந்துவிடப் போகிறது? இது எதிர்மறையான சிந்தனை. இதைவிட மோசமான பனிமூட்டத்தில் நான் முதல் தரப் போட்டிகளில் ஆடியுள்ளேன். ஆனால் இவர்கள் தொடர்ந்து ஆய்வு செய்வது கோபத்தை கிளப்புகிறது” என்று ஆவேசமாகப் பேசினார். ஸ்டெயின் அதிருப்தி தென்னாப்பிரிக்க ஜாம்பவான் டேல் ஸ்டெயினும் நடுவர்களின் முடிவைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்று கூறினார். “நடுவர்கள் எந்த விதியைப் பின்பற்றுகிறார்கள் என்று தெரியவில்லை. ஒரு வீரராகப் பார்க்கும்போது, இந்தச் சூழலில் நிச்சயம் விளையாட முடியும் என்றே தோன்றுகிறது. நடுவர்கள் யாராவது வந்து ஏன் தாமதப்படுத்துகிறார்கள் என்று விளக்கினால் நன்றாக இருக்கும்” என்று அவரும் தனது கருத்தைப் பதிவு செய்தார். இதற்கிடையில், மைதானத்தில் பனிமூட்டம் மற்றும் காற்று மாசு காரணமாக இந்திய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா முகக்கவசம் அணிந்து காணப்பட்டார். வீரர்கள் சிறிய அளவில் பயிற்சி செய்துவிட்டு மீண்டும் ஓய்வு அறைக்கு திரும்பினர். அதன் பின் 9.30 மணி அளவில் ஆறாவது முறையாக பனிப்பொழிவு சூழ்நிலையை ஆய்வு செய்த அம்பயர்கள் போட்டியை கைவிடுவதாக அறிவித்தனர். இதை அடுத்து பிசிசிஐ மீது ரசிகர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்