யுவராஜ் சிங் சாதனையை 4 பந்தில் தவறவிட்ட ஹர்திக் பாண்டியா

அகமதாபாத், டிச. 20- “சிங்கம் களத்துல இறங்குனா இப்படித்தான் இருக்கும்..” என்று அகமதாபாத் மைதானத்தையே அதிர வைத்துள்ளார் ஹர்திக் பாண்டியா. ஐந்தாவது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்து, வெறும் 16 பந்துகளில் அரைசதம் விளாசி மிரட்டியுள்ளார். யுவராஜ் சிங்கின் அதிவேக அரைசதம் என்ற உலக சாதனையையை 4 பந்துகளில் தவறவிட்டாலும், இந்திய டி20 வரலாற்றில் இரண்டாவது அதிவேக அரைசதத்தை பதிவு செய்து இருக்கிறார் ஹர்திக் பாண்டியா. இந்தப் போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில், சூர்யகுமார் யாதவ் அவுட்டாகி வெளியேறும்போது ஸ்கோர் 115 ரன்களுக்கு 3 என்பதாக இருந்தது. 13வது ஓவரில் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா, வந்த வேகத்தில் வாணவேடிக்கை காட்டினார். பந்துவீச்சாளர் யார் என்று கூட பார்க்காமல் நாலாபுறமும் சிக்ஸர்களை பறக்கவிட்டார். குறிப்பாக 16.5 ஓவரில் கார்பின் போஷ் வீசிய யார்க்கர் லெந்த் பந்தையை, சற்றும் யோசிக்காமல் மிட்-விக்கெட் திசையில் பிளிக் செய்து சிக்ஸருக்கு விரட்டினார். இந்த சிக்ஸர் மூலம் வெறும் 16 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் டி20 போட்டிகளில் அதிவேக அரைசதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் அபிஷேக் சர்மா சாதனையை முறியடித்தார். இந்திய வீரர்களின் அதிவேக டி20 அரைசதங்கள்: யுவராஜ் சிங் – 12 பந்துகள் (எதிர்: இங்கிலாந்து, 2007) ஹர்திக் பாண்டியா – 16 பந்துகள் (எதிர்: தென்னாப்பிரிக்கா, 2025)* அபிஷேக் சர்மா – 17 பந்துகள் (எதிர்: இங்கிலாந்து, 2025) கே.எல். ராகுல் – 18 பந்துகள் (எதிர்: ஸ்காட்லாந்து, 2021) சூர்யகுமார் யாதவ் – 18 பந்துகள் (எதிர்: தென்னாப்பிரிக்கா, 2022) திலக் வர்மா – ஹர்திக் கூட்டணி மறுமுனையில் திலக் வர்மாவும் அதிரடி காட்டினார். அவரும் தன் பங்குக்கு 42 பந்துகளில் 10 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 73 ரன்கள் குவித்தார். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு வெறும் 44 பந்துகளில் 105 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தென்னாப்பிரிக்காவை நிலைகுலையச் செய்தது. இறுதியில் ஹர்திக் பாண்டியா 25 பந்துகளில் 5 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 252.00 என்பதாக இருந்தது. 20 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்டியது. அடுத்து ஆடிய தென்னாப்பிரிக்க அணி 8 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் மட்டுமே எடுத்து 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.