
மும்பை, டிச. 27- ஆஸ்திரேலிய மகளிர் அணி ஜாம்பவான் மெக் லானிங் சாதனையை முறியடித்து, டி20 கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமான கேப்டனாக முடிசூடியுள்ளார் இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர். இந்திய மகளிர் அணியின் கேப்டனாக பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஹர்மன்பிரீத் கவுர், நேற்று (டிசம்பர் 26) திருவனந்தபுரத்தில் நடந்த போட்டியின் மூலம் ஒரு புதிய வரலாற்றுச் சாதனையை படைத்தார். இலங்கைக்கு எதிரான டி20 தொடரை 3-0 என ‘ஒயிட் வாஷ்’ செய்த கையோடு, சர்வதேச டி20 அரங்கில் அதிக வெற்றிகளைப் பெற்ற கேப்டன் என்ற இமாலய சாதனையைப் படைத்துள்ளார் ஹர்மன்பிரீத் கவுர். இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் பெற்ற வெற்றியுடன் சேர்த்து மொத்தம் 77 வெற்றிகள் பெற்றுள்ளார்.
இதுநாள் வரை, ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டனும் ஜாம்பவானுமான மெக் லானிங் 100 டி20 போட்டிகளில் 76 வெற்றிகளுடன் முதலிடத்தில் இருந்தார். அவரைத் தொடர்ந்து இங்கிலாந்தின் ஹீதர் நைட் (72 வெற்றிகள்) மற்றும் சார்லோட் எட்வர்ட்ஸ் (68 வெற்றிகள்) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். தனது 130-வது டி20 போட்டியில் கேப்டனாகக் களமிறங்கிய ஹர்மன்பிரீத், தனது 77-வது வெற்றியைப் பதிவு செய்து மெக் லானிங்கை இரண்டாம் இடத்திற்குத் தள்ளியுள்ளார். மெக் லானிங் ஒரு பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை வழிநடத்தி இந்தச் சாதனையைச் செய்தார் என்றால், ஹர்மன்பிரீத் ஒரு இளம் இந்திய அணியைக் கட்டமைத்து, அவர்களை வழிநடத்தி இந்த உயரத்தைத் தொட்டு இருக்கிறார். திருவனந்தபுரத்தில் நடந்த இந்த மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு, இந்திய பவுலர்கள் கடும் அழுத்தத்தை கொடுத்தனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அணிக்குத் திரும்பிய வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங் தாக்கூர், இலங்கையின் டாப் ஆர்டரைச் சிதறடித்தார். மறுபுறம் சுழற்பந்து வீச்சாளர் தீப்தி சர்மா, விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற பெருமையைப் பெற்றார். இந்திய பவுலர்களின் கட்டுப்பாடான பந்துவீச்சால் இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் மட்டுமே எடுத்தது.



















